பக்தர்களிடம் அரசு சாதனை புத்தகம் வற்புறுத்தி விற்பனை

மதுரை, நவ. 13: திருப்பரங்குன்றம் கோயிலில் சுவாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்களிடம் இந்துஅறநிலையத்துறையின் சாதனை விளக்க புத்தகத்தை வற்புறுத்தி விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது. மதுரை திருப்பரங்குன்றத்தில் நேற்று பவுர்ணமியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சுற்றி வந்தனர். இதன்பின்பு கோயிலுக்குள் சென்று, சுவாமியை பக்தர்கள் தரிசனம் செய்ய சென்றனர். கட்டண தரிசனத்தில் செல்லும் பக்தர்களிடம் ரூ.20 மதிப்புள்ள ஒரு புத்தகத்தை வற்புறுத்தி கோயில் ஊழியர்கள் விற்பனை செய்கின்றனர். சிலர் கோயில் என நினைத்து வேறு வழியின்றி வாங்குகின்றனர். சிலர் புத்தகம் வேண்டாம் என கூறினாலும், விடுவதில்லை. கண்டிப்பாக வாங்க வேண்டும் என வற்புறுத்தி வற்புறுத்தி புத்தகத்தை பக்தர்களிடம் கோயில் நிர்வாகம் விற்பனை செய்கிறது. இதற்கு பக்தர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.இதுகுறித்து சமூக ஆர்வலர் வக்கீல் முத்துக்குமார் கூறும்போது, ‘திருப்பரங்குன்றம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களிடம், இந்துசமய அறநிலையத்துறை சார்பில் இத்துறையின் சாதனை குறித்த ஒரு மாதாந்திர புத்தகத்தை வற்புறுத்திவிற்பனை செய்கின்றனர்.  இந்த புத்தகத்தில் அக்கோயில் பற்றி ஏதேனும், புராணம், கோயில் வரலாறு உள்ளிட்ட ஏதும் இல்லை. ஆளுங்கட்சியின் அரசியல் விளம்பரம், வர்த்தக விளம்பரம்தான் உள்ளது.

அதுவும் கடந்த மாத புத்தகத்தை இப்போது விற்பனை செய்கின்றனர். இதுபோன்ற புத்தகத்தை முன்பு மீனாட்சி அம்மன் கோயிலில் விற்பனை செய்தனர். அதற்கு எதிர்ப்பு வந்ததால், தற்போது நிறுத்திவிட்டனர். பொதுமக்களாக விரும்பி வாங்கலாம். ஆனால், எந்த கோயிலிலும் இதுபோன்ற புத்தகத்தை வற்புறுத்தி விற்பனை செய்வது முறையல்ல’ என்றார்.

அரசு ஊழியர் சங்கத்தினர் பிரச்சாரம்

திருப்பரங்குன்றம், நவ.13: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பிரச்சார வாகனம் திருப்பரங்குன்றம் வந்தது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேஸ்வரம் முதல் கோட்டை நேக்கி செல்லும் பிரச்சார வாகனம் நேற்று காலை திருப்பரங்குன்றம் வந்தடைந்தது. இந்த பிரச்சார வாகனம் ராமேஸ்வரம்,  களியக்காவிளை, வேதாரண்யம், ஓசூர், கூடலூர் ஆகிய ஐந்து ஊர்களில் இருந்து சென்னை கோட்டை நோக்கி செல்கிறது.  இதில் ராமேஸ்வரத்தில் இருந்து பிரச்சாரத்தை துவக்கிய வாகனம் திருப்பரங்குன்றம் பதினாறு கால் மண்டபம் வந்தடைந்தது. இவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி பதினாறு கால் மண்டபம் முன்பு பிரச்சாரம் மேற்கொண்டனர்.

Related Stories:

>