வேறு பஞ்சாயத்தினர் பெயர்கள் இடம்பெற்றிருப்பதாக வழக்கு

மதுரை, நவ. 13: வாக்காளர் பட்டியலில் வேறு பஞ்சாயத்தினர் பெயர்கள் இடம் பெற்றிருப்பது குறித்து பட்டியல் இறுதிபடுத்தும் போது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பர் என ஐகோர்ட் கிளை கூறியுள்ளது.  மதுரை மாவட்டம், கள்ளிக்குடி அருகேயுள்ள உன்னிபட்டியைச் சேர்ந்த ரவிச்சந்திரன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் உன்னிபட்டி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிடவுள்ளேன். ஆனால், தற்போது வெளியாகியுள்ள வாக்காளர் பட்டியலில் பல்வேறு விதமான ஆட்சேபனைகள் உள்ளன. குறிப்பாக ஆளும்கட்சியினருக்கு ஆதரவாக வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. பலரது பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. பலரது பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான புகாரின் பேரில் விசாரிக்கப்பட்டது. ஆனால், எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. கடந்த ஜனவரியில் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் 115 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தது. 103 பேரின் பெயர்கள் புதிதாக சேர்க்கப்பட்டிருந்தது. இதில், 50க்கும் மேற்பட்டோர் உன்னிப்பட்டி பஞ்சாயத்தை சேராத வேறு பஞ்சாயத்தை சேர்ந்தவர்கள். எனவே, உன்னிபட்டி பஞ்சாயத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் நீக்கியது, புதிதாக சேர்த்தது குறித்து முறையாக விசாரணை நடத்தவும் உத்தரவிட வேண்டும்.  இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆர்.தாரணி ஆகியோர் வேறு பஞ்சாயத்தினர் பெயர்கள் இடம் பெற்றிருப்பது குறித்து வாக்காளர் பட்டியல் இறுதிபடுத்தும் போது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பர். மனுதாரர் குற்றச்சாட்டு குறித்து அதிகாரிகள் உரிய நேரத்தில் கவனம் செலுத்துவர். எனவே, இந்த மனுவின் மீது இப்போது எந்த உத்தரவும் பிறப்பிக்க வேண்டியதில்லை எனக்கூறி மனுவை முடித்து வைத்தனர்.

Related Stories:

>