×

சதுரகிரியில் விடிய, விடிய மழை

வத்திராயிருப்பு, நவ. 13: சதுரகிரி மலைப்பகுதியில் நேற்று முன் தினம் இரவு விடிய, விடிய பெய்த மழையால், காட்டாற்று ஓடைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. தாணிப்பாறை வழுக்கல் பாறையில் அருவியாக தண்ணீர் சென்றது. தரிசனத்துக்கு அனுமதியில்லாததால் நேற்று காலை கூடிய பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். வத்திராயிருப்பு அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு அமாவாசை, பவுா்ணமிக்கு தலா 3 நாட்கள், பிரதோசத்திற்கு 1 நாள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். கடந்த 8ம் தேதி இரவு சுந்தரமகாலிங்கம் கோயில் பகுதியில் பெய்த பலத்த மழையால் தாணிப்பாறை, வழுக்கல்பாறை அருவி, ஓடைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. சுவாமி தரிசனத்திற்கு சென்ற 50 பேர் சங்கிலிப்பாறைக்கு மேல் சிக்கி கொண்டனா். கோயிலிலும் 200 பக்தர்கள் பரிதவித்தனர். இவர்களை வனத்துறை, தீயணைப்பு துறையினர் பத்திரமாக கீழே கொண்டு வந்தனர். இதையடுத்து கோயிலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. நேற்று முன்தினம் காலை வந்த 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு குவிந்தனர்.

கோயிலுக்கு செல்ல இவர்களுக்கு வனத்துறையினர் அனுமதி மறுத்துவிட்டனர். 2 மணிநேரம் காத்திருந்த பக்தர்கள் வனத்துறை கேட் முன்பு பத்தி, சூடம் ஏற்றி வழிபட்டுவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை சதுரகிரி கோவிலில் மழை பெய்யத் தொடங்கியது. இரவு முழுவதும் விடிய விடிய மழை பெய்ததால், ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. தாணிப்பாறை வழுக்கல் பாறையில் தண்ணீர் அருவியென கொட்டியது. கோயில் பாதைகளிலும் தண்ணீர் ஓடியது. இந்நிலையில், நேற்று காலை ஐப்பசி பவுர்ணமி வழிபாட்டில் கலந்து கொள்வதற்காக, 200க்கு மேற்பட்ட பக்தர்கள் வனத்துறை கேட் முன்பு குவிந்தனர். கனமழையால் காட்டாற்று ஓடைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால், தரிசனத்துக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளனர்.  இதனால், கோயிலுக்கு செல்ல அனுமதிக்க முடியாது என வனத்துறை தெரிவித்தனர்.  இதையடுத்து எஸ்.ஐ. நாகராஜன் பக்தர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். தரிசனத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளதால், அவர்வர் ஊர்களுக்கு திரும்பிச் செல்லுங்கள் என்றார். இதையடுத்து 5 மணி நேரத்துக்கு மேலாக காத்திருந்த பக்தர்கள், வனத்துறை கேட் முன்பு சூடம் கொளுத்தி தாிசனம் செய்துவிட்டு சென்றனர்.

Tags :
× RELATED மலைப்பகுதியில் தொடருது மழை: குற்றால அருவிகளில் கொட்டுது வெள்ளம்