×

அதிகாரி எப்போ வருவார்... தகவல் பலகை இல்லாத அரசு அலுவலகங்கள்

சிவகாசி, நவ. 13: சிவகாசியில் உள்ள அரசு அலுவலகங்களில் தகவல் பலகை இல்லாததால், அதிகாரிகளை பார்க்க வரும் பொதுமக்கள், நீண்ட காத்திருந்து அவதிப்படுகின்றனர். அரசை தேடி பொதுமக்கள் என்ற நிலை மாறி, பொதுமக்களை தேடி அரசின் திட்டங்கள் என்று ஆளும் கட்சியினர் விளம்பரம் செய்கின்றனர். ஆனால், உண்மையான நிலையோ, அரசை தேடி பொதுமக்கள் சென்றாலும் அதிகாரிகளை பார்க்க முடிவதில்லை என்னும் நிலைதான் சிவகாசி அரசு அலுவலங்களில் நடைபெற்று வருகிறது. ஆலோசனைக் கூட்டங்கள், ஆய்வுப் பணிகள், ரோந்துப்பணி என பல்வேறு பணிகளுக்கு தினந்தோறும் அரசு அலுவலகங்களில் பணியாற்றும் உயரதிகாரிகள் செல்கின்றனர். இது குறித்த தகவல் தெரியாததால், பொதுமக்கள் அரசு அலுவலங்களில் மணிக்கணக்கில் காத்திருக்கின்றனர். உயரதிகாரிகள் எங்கு சென்றுள்ளனர். எப்போது வருவார்கள் என்ற கேள்விகளுக்கு பதில் இல்லை. படித்தவர்கள் தகவலை தெரிந்து அதற்கு ஏற்றாற்போல, தங்களது பணிகளை மாற்றிக் கொள்கின்றனர். ஆனால், படிக்காதவர்கள் உயரதிகாரிகள் எங்கு சென்றுள்ளனர் என தெரியாமல் அரசு அலுவலகங்களில் மணிக்கணக்கில் காத்திருக்கின்றனர். அரசு அலுவலகங்களில் அதிகாரிகளின் நடவடிக்கையை அறியும் வகையில், தகவல் பலகை வைக்கப்பட வேண்டும் என்ற உத்தரவு காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. ஆனால், சில அரசு அலுவலகங்களில் பெயர் பலகைகள் காட்சிப்பொருளாக உள்ளன. தாசில்தார் அலுவலகம், பிடிஓ அலுவலகம், பொதுப்பணித்துறை அலுவலகம், நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் உட்பட பெரும்பாலான அலுவலகங்களில் தகவல் பலகை இல்லை.

சிவகாசி உட்கோட்டத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மட்டும் தகவல் பலகையில் விபரம் எழுதும் நடைமுறை பின்பற்றப்பட்டது. நாளடைவில் உயரதிகாரிகளின் ஆர்வமின்மையால் இத்திட்டம் கலாவதியானது. அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் முன்மாதிரியாக செயல்பட வேண்டிய சிவகாசி தாசில்தார் அலுவலகத்தில், தகவல் பலகை இல்லாமல் உள்ளது. இதனால், சிவகாசி தாசில்தார், தனி தாசில்தார், வட்ட வழங்கல் அதிகாரி உட்பட உயரதிகாரிகள் எப்போது வருவார்கள், எப்போது பார்க்க முடியும், அவர்களின் தொலைபேசி எண் உட்பட எந்த தகவலையும் பொதுமக்களால் தெரிந்து கொள்ள முடியவில்லை.  நேற்று சிவகாசி ஆர்டிஓ அலுவலகத்தில் சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது. இந்த குறை தீர்க்கும் கூட்டம் குறித்து, பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் தாசில்தார் அலுவலகத்தில் தகவல் பலகை வைக்கப்படவில்லை. குறைதீர்க்கும் முகாமிற்கு அதிகாரிகள் சென்றது கூட தெரியாமல் ஏராளமான பொதுமக்கள் தாசில்தார் அலுவலகத்தில் நீண்ட நேரம் காத்திருந்தனர்.
பொதுமக்களின் அலைச்சலை தவிர்க்கும் பொருட்டு, அனைத்து அரசு அலுவலங்களிலும், தகவல் பலகை வைத்து, உயரதிகாரிகள் வெளியில் செல்லும் தகவல்களையும், அவர்களது செல்போன் நம்பரையும் எழுதி வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Government offices ,board ,
× RELATED கொரோனா விதியை மீறிய 20 ஆயிரம் பேர் சிக்கினர்: சுகாதாரத்துறை அதிகாரி தகவல்