நெடுஞ்சாலைத்துறை- பேரூராட்சி பிரச்னையால் பாதியிலே நிற்கும் சாலை பணி

பட்டிவீரன்பட்டி, நவ. 13: நெடுஞ்சாலைத்துறை- பேரூராட்சி பிரச்னையால் பட்டிவீரன்பட்டியில் சாலை பணி கிடப்பில் கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.  பட்டிவீரன்பட்டியிலிருந்து காந்திபுரம், சின்னகவுண்டன்பட்டி, தேவரப்பன்பட்டி வழியாக அய்யம்பாளையம் வரையுள்ள 2- 3 கிமீ தூரமுள்ள ரோடு போடப்பட்டு சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாகின்றது. இந்த ரோட்டில்தான் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், அரசு அலுவலகங்கள் உள்ளன. இந்த ரோடு போடப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் பல இடங்களில் குண்டும், குழியுமாகவும், பாலங்கள் சேதமடைந்தும் காணப்பட்டது. இதனால் இப்பகுதி மக்கள் ரோட்டை புதுப்பித்து தர வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். பின்னர் ஒருவழியாக இதை ஏற்று, ஆத்தூர் மாநில நெடுஞ்சாலை உட்கோட்டம் சார்பில் ரூ.1 கோடியே 40 லட்சம் செலவில் இச்சாலையை புதுப்பிக்கும் பணிகள் நடந்து வந்தன.

சாலை பணியின் முதற்கட்டமாக பட்டிவீரன்பட்டி மேல்நிலைப்பள்ளி சாலை, தேவரப்பன்பட்டி சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு 4 இடங்களில் பாலம் அமைக்கும் பணி முடிந்துள்ளது.  அடுத்து 3.75 மீட்டர் அகலமுள்ள இச்சாலையை 5.5 மீட்டர் அகலமுள்ள சாலையாக விரிவுபடுத்த பட்டிவீரன்பட்டி- தேவரப்பன்பட்டி ரோட்டில் சாக்கடை அமைக்க பள்ளம் தோண்டினர். அதன்பின் இதுவரை எந்த பணிகளும் நடக்கவில்லை. இதனால் இந்த ரோட்டில் செல்வோர் தடுக்க பள்ளத்தில் விழும் சம்பவம் தினமும் நடக்கிறது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு பெய்த மழை தண்ணீர் பள்ளத்தில் தேங்கி இருந்தது. இதனால் பள்ளம் தெரியாமல் அவ்வழியாக வந்த ஆட்டோ கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. மேலும் இந்த ரோட்டில் கடை வைத்துள்ள வியாபாரிகள் பாதையில்லாததால் கடையை அடைத்து வைத்துள்ளனர். இதுபோல் அனைத்து தரப்பினரும் கிடப்பில் கிடக்கும் இந்த சாலை பணியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறையினரிடம் கேட்டபோது, பட்டிவீரன்பட்டி மெயின்ரோடு அருகேயுள்ள நாடார்கள் உறவின்முறை கட்டிடத்திலிருந்து  பெண்கள் பள்ளி பாலம் வரை உள்ள பழைய சாக்கடையை நிபந்தனையுடன் தான் ரோடு விரிவாக்கத்திற்காக இடித்தோம். ஆனால் சாக்கடை கட்ட பேரூராட்சி நிர்வாகத்தின் தாமதம் செய்வதால் பணிகள் பாதியில் நிற்கிறது’ என்றனர்.  இதுபற்றி பட்டிவீரன்பட்டி செயல் அலுவலரிடம் கேட்டபோது, ‘எங்களிடம் கேட்காமல் இடித்து விட்டனர். இருந்தாலும் பொதுமக்களின் சிரமம் கருதி இந்த சாக்கடை அமைக்கும் பணிக்காக திட்டஅறிக்கை தயார் செய்து வருகிறோம். விரைவில் பணிகள் துவங்கும்’ என்றார். நெடுஞ்சாலைத்துறையினருக்கும், பேரூராட்சி நிர்வாகத்திற்கும் நடக்கும் பிரச்னையால் அப்பாவி மக்களும், மாணவ,மாணவிகளும், வியாபாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பாதியில் நிற்கும் சாலை பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>