×

இடையாத்தி அரசு பள்ளிக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பு

பேராவூரணி, நவ. 13: பேராவூரணி ஊராட்சி ஒன்றியம் இடையாத்தி கிழக்கு தொடக்கப்பள்ளிக்கு சொந்தமான இடத்தை மீட்டு தரக்கோரி கலெக்டருக்கு பொதுமக்கள் கோரிக்கை மனு அனுப்பினர்.தஞ்சை கலெக்டருக்கு பேராவூரணி அடுத்த இடையாத்தியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர். அதில் பேராவூரணி ஊராட்சி ஒன்றிய ஆணையர் பெயரில் உள்ள இடையாத்தி கிழக்கு தொடக்கப்பள்ளிக்கு சொந்தமான இடத்தை தனிநபர் ஆக்கிரமித்து மழைநீர் சேகரிப்பு தொட்டி, சுற்றுச்சுவர், மாணவர்களுக்கு கழிப்பறை போன்ற அரசு திட்டங்களை செயல்படுத்தவிடாமல் தடுத்து வருகிறார்.மேற்படி திட்டங்களை செயல்படுத்த அரசு பள்ளி இடத்தை அளவு செய்ய வேண்டும். இந்த பள்ளியில் மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, ஏழை, எளிய கூலி விவசாயிகளின் குழந்தைகள் 70 பேர் கல்வி பயின்று வருகின்றனர்.மாணவ, மாணவிகளின் பாதுகாப்புக்காக சுற்றுச்சுவர் அமைக்க மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசின் மழைநீர் சேகரிப்பு திட்டத்தின் மூலம் மூன்று தொட்டிகள் அமைக்க கடந்த 26ம் தேதி அதற்கான பணிகள் நடந்தபோது ஆக்கிரமிப்பு நபர்கள் அரசு வேலையை தடுத்து நிறுத்தி விட்டனர்.

அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தின் மூலம் கட்டப்பட்ட புதிய கட்டிடம் எவ்வித பாதுகாப்பின்றி பள்ளி விடுமுறை நாட்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. பள்ளிக்கு தடுப்பு சுவரோ, முள்வேலியோ இல்லாததால் அவர்களுக்கு சாதகமாக அமைந்து விடுகிறது.மேற்கண்ட அரசு பள்ளிக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பாளர்கள் குடிசை அமைத்து மின்சார வசதி செய்துள்ளனர். மேலும் பள்ளியில் மாணவர்களின் தேவைக்காக அமைத்துள்ள குடிநீர் குழாய் மூலமாக தென்னந்தோப்புக்கு குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்கிறார்கள். ஆக்கிரமிப்பாளர்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக ஆணையர் பெயரில் உள்ள அரசு பள்ளி இடத்தை ஆக்கிரமித்து தங்கள் வசம் வைத்துள்ளனர்.இந்த இடம் தொடக்கத்தில் ஆசிரியர் குடியிருப்பு, குழந்தைகள் நல மையம், கிராம சாவடி ஆகியவை இருந்த இடமாகும். இவை அனைத்தும் பேராவூரணி ஊராட்சி ஒன்றிய ஆணையர் பெயரில் பதிவுத்துறை மற்றும் வருவாய்த்துறை ஆவணங்களில் உள்ளது. எனவே மேற்கண்ட அரசு பள்ளி இடத்தை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டு அரசின் திட்டங்கள் முழுமையாக மாவட்ட நிர்வாக உதவியோடு செயல்படுத்தவும், ஏழை, எளிய மாணவர்கள் பாதுகாப்புடனும் கல்வி கற்கும் வகையில் மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


Tags : land ,Idaiyathi Government School ,
× RELATED பேராவூரணி கடைவீதியில் கடைக்காரர்கள்...