×

பாரம்பரிய நெல் நடவு விழா

திருவாரூர், நவ. 13: திருவாரூர் மாவட்டம் குடவாசலில் பாரம்பரிய நெல் நடவு விழா நடைபெற்றது.திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள பெரும்பண்ணையூர் கிராமத்தில் பாரம்பரிய நெல்களான கிச்சடி சம்பா மற்றும் இலுப்பைப்பூ சம்பா போன்ற நெல் வகைகள் நாற்று நடவு திருவிழா நடைபெற்றது. விவசாயி அன்பழகன் என்பவர் வயலில் நடைபெற்ற இந்த விழாவிற்கு முன்னோடி விவசாயிகளான வேணுகோபால் மற்றும் எட்வின் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் கீரீன் நீடா அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ராஜவேலு மற்றும் விவசாயிகள் சண்முக வடிவேலன், விஜயகுமார் , தனபாலன் உட்பட பல்வேறு விவசாயிகள் ஒன்று சேர்ந்து நடவு பணியில் ஈடுபட்டனர். பின்னர் இந்த பாரம்பரிய நெல் நடவு குறித்து ஒருங்கிணைப்பாளர் ராஜவேலு கூறுகையில், நமது பாரம்பரிய நெல் ரகங்கள் ஒவ்வொன்றும் மருத்துவ குணம் வாய்ந்தவையாகும். அப்படி பட்ட இந்த பாரம்பரிய நெல் வகைகளை போற்றிப் பாதுகாத்து பயிரிட வேண்டியது விவசாயிகளின் தலையாய கடமையாக இருந்து வருகிறது. மேலும் இந்த நெல் வகைகள் வறட்சி மற்றும் பூச்சி நோய் தாக்குதலை தாங்கி வளரக்கூடியவை என்பதால் விவசாயிகள் இது போன்ற நெல் ரகங்களை நடவு செய்வதற்கு முன் வருமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு ராஜவேலு தெரிவித்துள்ளார்.


Tags : Paddy Planting Ceremony ,
× RELATED அமைச்சர் காமராஜ் பேட்டி...