×

கால்நடைகளுக்கான தீவனபயிர்களை அரசு மானியத்துடன் உற்பத்தி செய்யலாம்

திருவாரூர். நவ. 13: திருவாரூர் மாவட்டத்தில் கால்நடைகளுக்கான தீவனப்பயிர்களை அரசு மானியத்துடன் உற்பத்தி செய்திட விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து கலெக்டர் ஆனந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:கால்நடைகளின் உற்பத்தித்திறனுக்கு தீவனம் மற்றும் பசுந்தீவனம் மிகவும் இன்றியமையாத காரணிகள் ஆகும். பால் உற்பத்தியைப் பெருக்குவதற்கு, கறவை மாடுகளுக்கு தேவையான அளவு பசுந்தீவனம் வழங்குவது மிகவும் இன்றியமையாதது. கால்நடைகளுக்கான மொத்த உற்பத்தி செலவினத்தில் 65 -முதல் 70 விழுக்காடு, தீவன மற்றும் பசுந்தீவன உற்பத்திக்கு மட்டுமே செலவிடப்படுகிறது. பசுந்தீவனத்தின் தேவைக்கும், உற்பத்திக்கும் இடையே மிகப் பெரிய இடைவெளி உள்ளது. எனவே தீவனப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையிலும், கால்நடை வளர்ப்போர் பசுந்தீவனத்தை உற்பத்தி செய்வதை ஊக்கப்படுத்தும் வகையிலும் தமிழக அரசு கடந்த 6 ஆண்டுகளாக மாநில தீவன அபிவிருத்தி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் நோக்குடன் கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் நடப்பு நிதியாண்டில் (2019-2020) திருவாரூர் மாவட்டத்தில் அரசு மானியத்துடன் கூடிய தீவனப்பயிர் சாகுபடி திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளது.

இதில் மானாவாரியில் பல்லாண்டு தீவன சோளம், தீவனப்பயிர் 100 ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்திட தீவன விதைகள் வழங்குதல், இறவையில் 20 ஏக்கர் பரப்பில் தீவனச்சோளம் மற்றும் ஆப்பிரிக்க நெட்டை வகை சோளம், காராமணி, காராமணி தீவனச் சோளம் மற்றும் தீவனத் தட்டைப்பயறு சாகுபடி செய்திட தீவன விதைகள் வழங்குதல் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்கு எல்லா இனங்களிலும் 30 சதவிதம் வரையில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தவர்கள் பயனாளிகளாக தேர்ந்தெடுக்கப்படுவர். மேலும் குறுவிவசாயிகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். எனவே இந்த திட்டங்களில் மூலம் பயன்பெற விருப்பமுள்ள, கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள கால்நடை நிலையங்களை நேரில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு கலெக்டர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED மணல் குவாரியை திறக்க கோரி அய்யனார்...