×

அறநிலையத்துறை அதிகாரிகள் அலட்சியத்தால் இடிந்து விழுந்தது செல்வ விநாயகர் கோயில் வெளிப்பிரகார மண்டபம்

திருச்சி, நவ.13: திருச்சி பாலக்கரையில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான செல்வ விநாயகர் கோயில் வெளிப்பிரகார மண்டபம் இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பாலக்கரை பகுதியில் உய்யக்கொண்டான் கால்வாய் கரையோரம் செல்வ விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயில் பல நூற்றாண்டுகள் பழமையானது ஆகும். கோயிலின் வெளிப்பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி, வள்ளி தெய்வானை சமமேத சுப்பிரமணியர், விஷ்ணுதுர்கை, சண்டிகேஸ்வரர், நவக்கிரகங்கள், ஆலயத்தூணில் ஆஞ்சநேயர் போன்ற சுவாமி சிலைகள் உள்ளன. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலில் தினமும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் வந்து வழிபட்டு செல்வது வழக்கம். 2.6.1993ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதற்கு முன்பு உண்டியல் வருவாய் மாதம் ரூ.60 ஆயிரம் இருந்தது. ஆனால், கோயிலை சரியாக பராமரிக்காததால் உண்டியல் வசூல் மாதம் ரூ.20 ஆயிரத்திற்கு குறைந்துவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் கோயிலுக்கு சொந்தமான பல்வேறு நிலங்கள் மாயமாகி வருகிறது என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது.

ஆனால் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கோயிலை பராமரிக்காமல், கோயில் சுற்றுப்பிரகாரம் அபாயகரமாக உள்ளது என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் கோயிலை புனரமைப்பு செய்யாமல் அலட்சியமாக இருந்து வந்தனர். இந்நிலையில் நேற்று கோயிலின் சுற்றுப்பிரகார மண்டபம் திடீரென இடிந்து விழுந்துவிட்டது. அதிர்ஷ்டவசமாக அந்த நேரம் பக்தர்கள் யாரும் அந்த பகுதியில் இல்லை. இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.இது குறித்து இந்து திருக்கோயில்கள் மீட்பு இயக்க நிறுவனர் மகேஸ்வரி வையாபுரி கூறுகையில்,இந்த கோயிலை புனரமைக்க வேண்டுமென்றும், கும்பாபிஷேகம் நடத்திட வேண்டும் என பல ஆண்டுகளாக தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறையிடம் மனு கொடுத்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால், அவர்கள் அதை கண்டுகொள்வதே கிடையாது. உண்டியல் வருவாய் போதும் என நினைக்கின்றனர். இந்த அதிகாரிகள் அலட்சியத்தின் வெளிப்பாடே தற்போது பிரகார மண்டபம் இடிந்து விழுந்துவிட்டது. இனியாவது அதிகாரிகள் கோயிலை புனரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.கோயில் வருவாயை மட்டும் எடுத்துச்செல்லும் இந்து சமய அறிநிலையத்துறை அதிகாரிகள் உடனடியாக கோயிலை புனரமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்ைக விடுத்துள்ளனர்.

Tags : courtyard ,Selvam Vinayakar Temple ,State Department ,
× RELATED ரஷ்யாவின் உள்நாட்டு விவகாரங்களில்...