×

கல்லார்வலி பாலத்தின் சுவர் கடும் ேசதம்

மூணாறு, நவ.13: மூணாறு அருகே கல்லார்-மாங்குளம் பகுதியை இணைக்கும் கல்லார்வலி பாலத்தின் சுவர் சேதமடைந்துள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. பாலத்தை உடனடியாக சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மூணாறு அருகே அமைந்துள்ளது கல்லார். இங்கிருந்து மாங்குளம் பகுதியை இணைக்கும் முக்கிய பாலமாக கல்லார்வலி பாலம் உள்ளது. இந்த பாலத்தின் பாதுகாப்பு மதில் சுவர் உடைந்ததன் காரணமாக குரிஷுபாறை , பீச்சடு, மாங்குளம் பகுதிகளுக்கு செல்லும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் கனரக வாகனங்கள் மற்றும் பேருந்துகள் இந்த பாதை வழியாக செல்ல தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக அப்பகுதி பொதுமக்கள் நிலை கேள்விக்குறியாக மாறியுள்ளது. தற்பொழுது பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் குரிஷுபாறை பகுதியில் இருந்து ஆட்டோ மூலம் பீச்சடு பகுதிக்கு வந்தடைகின்றனர். அதன் பின்னர் பேருந்துகள் மூலம் மற்ற பகுதிகளுக்கு செல்லவேண்டிய நிலை உருவாகியுள்ளது. இந்த நிலைக்கு முக்கிய காரணம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் என்று பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மக்கள் கூறுகையில், கடந்த இரண்டு தினங்களுக்கு  முன்பு  கல்லார்-மாங்குளம் பகுதியில் கனமழை பெய்ததின் காரணமாக கல்லார்வலி பாலத்தின் பாதுகாப்பு மதிலில் சிறிய அளவு விரிசல் ஏற்பட்டது. இது குறித்து பொதுமக்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். ஆனால் அதிகாரிகள் விரிசல் ஏற்பட்ட பகுதியை சரி செய்வதில் மெத்தனப்போக்கு காட்டினர். இந்நிலையில் நேற்று முன்தினம் பாதுகாப்பு மதில் சுவர் முற்றிலும் இடிந்து விழுந்தது. இதற்கு முக்கிய காரணம் பொதுப்பணித்துறை அதிகாரிகள்தான். தற்போது  பேருந்துகள் அனைத்தும் குரங்கடி வழியாக இயக்கப்பட்டாலும் இந்த பாதைகள் ஆபத்தான வளைவுகள் நிறைந்த பாதையாகும். எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு கல்லார் வலி பாலத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

Tags : Kallarwali Bridge ,
× RELATED இடுக்கியில் இன்று பிரசாரம் நிறைவு