×

மாணவர்கள் செய்திகளை அதிகமாக வாசிக்க வேண்டும்

காரைக்குடி, நவ.13:  மாணவர்கள் அரசியல், வரலாறு, சமூக பொருளாதாரம் மற்றும் அறிவியல் தொடர்பான செய்திகளை அதிகமாக வாசிக்க வேண்டும் என அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் என்.ராஜேந்திரன் தெரிவித்தார்.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக நூலக மற்றும் தகவல் அறிவியல் துறையின் சார்பில் உலக எழுத்தறிவு தினம் கொண்டாடப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் தனுஷ்கோடி வரவேற்றார். துணைவேந்தர் என்.ராஜேந்திரன் தலைமை வகித்து பேசுகையில், அனைத்துவிதமான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைவது எழுத்தறிவு. போதிய எழுத்தறிவு உள்ள சமுதாயத்தில் தான் கல்வியறிவும் மற்ற திறன்களும் வளர முடியும். தமிழகத்தில் சிறந்த இலக்கியங்கள் மற்றும் காப்பியங்கள் படைக்கப்பட்டிருந்தன. ஆனாலும் இந்திய மற்றும் தமிழக வரலாற்றை அறிந்து கொள்ள ஐரோப்பியர்களின் புத்தகங்களைத்தான் நாட வேண்டியுள்ளது.

ஆனால் மற்ற நாடுகளில் அந்தந்த நாட்டினரே அவர்களது நாட்டின் வரலாற்றை எழுதியுள்ளனர். இந்தியாவில் இலக்கியங்களும், காப்பியங்களும் நிறைய இருந்திருக்கிறது என்றால் அதற்கு எழுத்துக்களும், எழுத்தறிவும் நீண்ட காலத்திற்கு முன்பே இருந்துள்ளது. மவுரிய காலத்திற்கு முன்பே கி.மு ஆறாம் நூற்றாண்டிலேயே தமிழ் எழுத்துக்கள் இருந்துள்ளதாக சமீபத்திய கீழடி அகழ்வாராய்ச்சியில் தெரியவந்துள்து. அனைத்து நாடுகளும் வரலாற்று ஆய்விற்கு அதிக முக்கியத்தும் கொடுத்து வருகிறது. கல்வியும், அறிவியலும் வேகமாக வளர்ந்துள்ள இந்த நிலையில் இன்றும் உலகில் பலர் எழுத்தறிவில்லாதவர்களாக உள்ளனர். மாணவர்கள் அவர்களுக்கு கிடைத்துள்ள தொழில்நுட்பம் மற்றும் நூலக வசதிகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அரசியல், வரலாறு, சமூகப் பொருளாதாரம், அறிவியல் தொடர்பான செய்திகளை அதிகமாக வாசிக்க வேண்டும் என்றார். எழுத்தாளர் அகரமுதல்வன், ஜே.டி. குரூஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். பேராசிரியர் ஜெய்சங்கர் நன்றி கூறினார்.

Tags :
× RELATED கள்ளக்குறிச்சியில் மேலும் 81 பேருக்கு கொரோனா.: 22 பேர் உயிரிழப்பு