×

கடற்கரை பகுதியில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்

சாயல்குடி, நவ.13: சாயல்குடி கடற்கரை கிராம பகுதியில் வேகமாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் சுகாதாரத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாயல்குடி அருகே வாலிநோக்கம், கீழமுந்தல், மேலமுந்தல், கன்னிராஜபுரம், ரோச்மா நகர், நரிப்பையூர், மாணிக்க நகர், குதிரைமொழி, இலந்தைகுளம், கண்ணிகாபுரி, மூக்கையூர் உள்ளிட்ட கடற்கரையை ஒட்டிய சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு சிலர் குப்பைகளை ஆங்காங்கே கொட்டி விட்டதால் தேங்கி கிடக்கிறது. கடற்கரை ஓரங்களில் மீன், கருவாடு, சங்கு, கடல்புல் போன்ற கழிவுபொருட்களும் சிதறி ஆங்காங்கே குவிந்து கிடக்கிறது. அவை தெருக்களில் ஓடும் கழிவு நீரில் கலந்து கிடக்கிறது. தற்போது பெய்த மழைத்தண்ணீரும் ஆங்காங்கே தேங்கி சுகாதாரக் கேட்டை ஏற்படுத்தி வருகிறது. தேங்கி கிடக்கும் தண்ணீரில் குடியிருக்கும் கொசுக்களால் இப்பகுதி குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை கை, கால், மூட்டு வலியுடன் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வாலிநோக்கத்தில் சிலருக்கு காய்ச்சல் வந்துள்ளது. மருத்துவமனையில் ரத்த பரிசோதனை செய்ததில் மூன்று பேருக்கு டெங்கு அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிரமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நரிப்பையூர் மற்றும் அருகிலிருக்கும் கடற்கரை கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்களுக்கும் அடிக்கடி காய்ச்சல் வருவதால் அப்பகுதி கிராம மக்கள் டெங்கு பீதியில் உள்ளனர். இதனால் மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர். கடற்கரை கிராமங்கள் என்பதால் சுகாதாரத்துறை மற்றும் பஞ்சாயத்து நிர்வாகங்கள் குப்பைகள், மழைநீரை அகற்றுதல் உள்ளிட்ட விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது கிடையாது என இப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர். இதனால் சுகாதாரக்கேடு நிலவி தொற்று நோய்கள் பரவி வருவதாக கூறுகின்றனர். எனவே சாயல்குடி கடற்கரை பகுதியில் வேகமாக பரவி வரும் டெங்குவை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கைகளை விரைந்து செயல்படுத்த வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : coast ,
× RELATED சாலையின் இருபுறமும் மணலால் விபத்தில் சிக்கும் வாகனங்கள்