×

முதுகுளத்தூர், கடலாடி ஒன்றியத்தில் பயன்பாடின்றி கிராம சேவை மையங்கள்

சாயல்குடி, நவ. 13: ஊராட்சிகள் அளவில் செயல்படும் மகளிர் கிராம வறுமை ஒழிப்பு திட்டம், புதுவாழ்வு திட்டம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஆகியவற்றில் இ.சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றில் பொதுமக்கள் தேவையான சாதி, இருப்பிடம், வருமானம், விதவை, பட்டா சம்பந்தப்பட்ட ஆவணம் உள்ளிட்ட 61 சான்றுகள் பெறலாம் என்ற அரசு ஆணை நடைமுறையில் உள்ளது. கிராமங்களில் வறுமை ஒழிப்பு திட்ட இ.சேவை மையம், நூறுநாள் வேலை திட்ட சேவை மையங்களில் செயல்பட ஊராட்சி நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. ஆனால் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள 48 ஊராட்சிகளில் கட்டப்பட்ட சேவை மையங்களில் ஒரு சில சேவை மையக் கட்டிடங்களும், கடலாடி ஊராட்சி ஒன்றியத்திலுள்ள 60 ஊராட்சிகளில் 5க்கும் மேற்பட்ட சேவை மையக் கட்டிடங்கள் கட்டி முடிக்கப்படாமலேயே உள்ளது. இரண்டு ஒன்றியங்களிலும் 2014ம் ஆண்டு முதல் துவங்கப்பட்ட சேவை மையம் கட்டிடம் பணிகள் முழுமையடையாமல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது.

கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்த சேவை மையங்களில் பெயருக்கு இ.சேவை மையம் அறிவிப்பு பலகை மட்டும் உள்ளது. கணிப்பொறிகள், இண்டர்நெட் சேவை மற்றும் தளவாட சாமான்கள் கூட வரவில்லை. செயல்படுத்தப்பட்ட சில சேவை மையங்களில் இணையதள இணைப்பு வழங்காதது, கணிப்பொறி பழுது, கணிப்பொறி இயக்க தெரியாதது, ஆள் பற்றாக்குறை போன்ற காரணங்களால் இத்திட்டம் செயல்படாமல் முடங்கி உள்ளது. இதனால் கிராமங்களில் தேவையான சான்றுகளை பெற முடியாமல் அவதிப்படுவதாக கிராம மக்கள் புகார் கூறுகின்றனர். பள்ளி, கல்லூரி மற்றும் பொதுமக்களுக்கு தேவையான சான்றுளை பெற கிராமங்களிலிருந்து இரண்டிற்கும் மேற்பட்ட பேருந்துகள் மாறி, கூடுதல் பணம் செலவழித்து முதுகுளத்தூர் மற்றும் கடலாடி தாலுகா அலுவலகங்களில் செயல்படும் இ.சேவை மையங்களுக்கு வந்து செல்கின்றனர். தாலுகா அலுவலகங்களில் கூட்டம் அதிகரிப்பதால் சான்றுகளுக்கு விண்ணப்பம் செய்வதில் கால தாமதம் ஏற்படுகிறது. மேலும் இந்த இ.சேவை மையங்களிலும் அடிக்கடி நெட் பிரச்னை, மின் தடை, இயந்திரம் பழுது போன்ற காரணங்களில் கால விரயம் ஏற்படுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

தற்போது விவசாயம் காலம் என்பதால் தேசிய பயிர்காப்பீடு திட்டத்தில் பயிர்காப்பீடு செய்ய தேவையான 10(1) போன்ற கணினி சான்றுகளை பெற முடியாமல் அவதிப்பட்டு வருவதாக விவசாயிகள் புகார் கூறுகின்றனர். உதவி தொகை பெற, அரசு பணிக்கு விண்ணப்பிக்க தேவையான சான்றுகளை எளிதாக வழங்க கிராமங்களில் உள்ள இ.சேவை மையங்களை செயல்படுத்த வேண்டும். தாலுகா அலுவலகங்களில் கூடுதல் கவுன்டர்களை திறக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : service centers ,Mudukulathur ,
× RELATED என்னை பச்சோந்தி என்ற எடப்பாடி பச்சை...