வந்தவாசி அடுத்த தேசூரில் 1,500 ஆண்டுகள் பழமையான நடுகற்கள் கண்டெடுப்பு

வந்தவாசி, நவ.13:  வந்தவாசி அடுத்த தேசூர் கிராமத்தில், சுமார் 1,500 ஆண்டுகள் பழமையான, காலத்தால் முற்பட்ட எழுத்துடைய நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. வந்தவாசி அடுத்த தேசூர் பகுதியில் எண்ணற்ற வரலாற்று சான்றுகள் மற்றும் நினைவு சின்னங்கள் உள்ளன. முறையான பராமரிப்பு, பாதுகாப்பு இல்லாமல் அவற்றில் பெரும்பாலானவை சிதைந்து காணப்படுகின்றன. அவற்றை மீட்டெடுக்கும் முயற்சிகள் தொல்லியல் ஆர்வலர்கள் மூலம் நடந்து வருகிறது. இந்நிலையில், தேசூர் பகுதியில் பாழடைந்த கோட்டை மற்றும் சில சிலைகள் இருப்பது குறித்து வருவாய் உதவியாளர் வெங்கடேஷ் என்பவர் அளித்த தகவலின் பேரில், திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலர் ச.பாலமுருகன், சுதாகர் ஆகியோர் ஆய்வு நடத்தினர். அப்போது, தேசூர் விஏஓ பாபு, கிராம உதவியாளர் அதியமான், ராஜசேகர் மற்றும் உள்ளூர் மக்கள் உடனிருந்தனர்.

அப்போது, பாழடைந்த நிலையில் ஒரு மசூதி போன்ற கட்டடமும் அதன் அருகில் 5 நடுகற்களும் இருப்பது தெரியவந்தது. அதில், 2 நடுகற்களில் 4 அல்லது 5ம் நூற்றாண்டு எழுத்தமைவில் தமிழ் மொழியில் எழுதப்பட்ட 2 வரியில் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த நடுகற்கள் குறித்து, வரலாற்று அறிஞர் ர.பூங்குன்றன் தெரிவித்த தாவது: தேசூரில் கிடைத்த எழுத்துடைய இரண்டு நடுகல்லில், சீயமங்கலத்தில் எறிந்துபட்ட கொற்றம்பாக்கிழார் என்றும், மற்றொன்றில் சீயமங்கலத்தில் எறிந்துபட்ட கொற்றம்பாக்கீழார் மகன் சீலன் என்றும் குறிப்பிட்டுள்ளன. இதில், வீரனின் கையில் கத்தியும் கேடயமும் வைத்திருப்பது போன்ற அமைப்பில் சுமார் 4 அடி உயரத்தில் அமைந்துள்ளது. அதன் அருகில் உள்ள 3 நடுகற்களும் காலத்தால் பிற்பட்டவை. சீயமங்கலத்தில் பாணரைசர் ஆண்ட காலத்தில் கொற்றம்பாக்கிழார் அவ்வூரை தாக்கியிருக்க வேண்டும்.

இவர்களுக்கிடையே மாடுபிடி மோதலோ அல்லது ஊர்களுக்கிடையே மோதலோ ஏற்பட்டிருக்கலாம் என்றும் அவ்வாறு ஏற்பட்ட ஒரு பூசலில் மேற்குறிப்பட்ட கொற்றம்பாக்கிழாரும் அவருடைய மகன் சீலனும் இறந்துவிட அவர்கள் நினைவாக இந்நடுகற்களை வைத்துள்ளனர். ஏற்கனவே, இப்பகுதியில் சீயமங்கலத்து பாணரைசர் என்ற வாசகத்துடன் ஒரு நடுகல் கண்டெடுக்கப்பட்டது. அதில், சீயமங்கலம் என வருவதால் இப்பகுதி பாணரைசர்கள் ஆண்ட பாணாடு ஆக இருக்கவேண்டும் என்றும் இது வடமொழியில் பாணராட்டிரம் என்று அழைக்கப்பட்டது என்றும் இந்நாடு கடலூர் வரை பரவியிருந்தது என்றும் கருதலாம். மேலும், பாணர்களின் தலைவர்களில் ஒருவராக இந்த நடுகல்லில் குறிப்பிடும் கொற்றம்பாக்கிழார் இருந்திருக்க வேண்டும். கொற்றம்ப என்பது தற்போதைய தேசூராக இருக்கலாம் என்றும் தேசு என்பதற்கு வெற்றி என்றும் பொருள் கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டார்.

சீயமங்கலம் என்பது பல்லவர் கால குடைவரை உள்ள ஊர். இது, தேசூருக்கு அருகில் 2 கி.மீ. தூரத்தில் உள்ளது. இவ்வூரில் கிடைக்கப்பெற்ற இந்த நடுகற்களில் உள்ள கல்வெட்டுகள் மூலம், ஊரில் நடந்த பூசலில் தந்தையும் அவருடைய மகனும் இறந்ததின் நினைவாக எடுக்கப்பட்ட சிறப்பானதொரு நடுகல் ஆகும். தமிழகத்தில் கிடைத்த நடுகற்களில், தந்தை மற்றும் மகனுக்கு எடுக்கப்பட்ட நடுகற்கள் இதுவேயாகும். மேலும், இவ்விரு நடுகற்களும் தொண்டை மண்டலத்தில் கிடைத்த, காலத்தால் முற்பட்ட எழுத்துடைய நடுகற்கள் என்ற சிறப்பையும் பெறுகிறது. இந்த நடுகற்கள், இப்பகுதியின் வரலாற்றுக்கு சிறந்த ஆதாரமாக அமைந்திருக்கிறது.

Related Stories: