×

உயர்நீதிமன்ற உத்தரவை கண்டுகொள்ளாத போக்கு: வேலூரில் மீண்டும் முளைக்க தொடங்கும் ஆளும்கட்சி பேனர்கள்

வேலூர், நவ.13: உயர்நீதிமன்ற உத்தரவை கண்டுகொள்ளாமல் வேலூரில் மீண்டும் போக்குவரத்துக்கு இடையூறாக பேனர்களை வைக்கும் போக்கில் ஆளும் கட்சியினர் இறங்கியுள்ளது சமூக ஆர்வலர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. தமிழகம் முழுவதும் சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்படும் பிளக்ஸ் பேனர்களால் போக்குவரத்து நெரிசலுடன், அவற்றால் விபத்துகளும் அதிகரித்து வந்த நிலையில், இதற்கு முற்றுப்புள்ளி வைக்க டிராபிக் ராமசாமி போன்ற பொதுநல ஆர்வலர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் சாலைகளில் பேனர்களை வைக்க கட்டுப்பாடுகளை விதித்தது. குறிப்பாக ஆளுங்கட்சி உட்பட பல்வேறு கட்சியினரால் அளவுக்கு அதிகமாக சாலைகளில் வைக்கப்படும் பேனர்களால் ஏற்படும் விபத்துகள் தொடர்ந்து நடந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 12ம் தேதி சென்னை பள்ளிக்கரணையில் சாலையில் வைக்கப்பட்ட பேனர் சரிந்து இருசக்கர வாகனத்தில் சென்ற சுப என்ற சாப்ட்வேர் இன்ஜினியர் வாகனத்தில் சிக்கி பலியானார்.

இச்சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டது. இதில் தமிழக அரசுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்தது. இதையடுத்து சாலைகளில் பேனர்களை வைப்பதை முற்றிலும் தடை செய்யும் நடவடிக்கையில் தமிழக அரசு இறங்கியது. இதனால் சாலைகளில் பேனர்களை பார்க்க முடியாத நிலை கடந்த ஒரு மாதத்துக்கும் மேல் நீடித்தது. இது பொதுமக்களையும் நிம்மதியில் ஆழ்த்தியது.
இந்த நிலையில் மீண்டும் பேனர் கலாசாரம் மெல்ல தலைக்காட்ட தொடங்கியுள்ளது. சென்னை மட்டுமின்றி, திருவண்ணாமலை, விழுப்புரம், கோவை, சேலம், தருமபுரி என மாநிலம் முழுவதும் ஆளுங்கட்சியினரின் பேனர்கள் உயர்நீதிமன்ற உத்தரவை மீறி வைக்கப்படுகின்றன. குறிப்பாக, வேலூரில் கடந்த ஒரு வாரகாலமாக திருமண நிகழ்ச்சிகள், பொதுநிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்கள், பிறந்த நாள், மரண அறிவிப்பு என எல்லாவற்றுக்கும் பேனர்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

நேற்று முன்தினம் வேலூர் டோல்கேட்டில் ஆளுங்கட்சி பிரமுகர் திருமணம் நடந்தது. இதற்காக வேலூர் அண்ணா சாலையில் திருமலை திருப்பதி தேவஸ்தான தகவல் மையம் தொடங்கி டோல்கேட் வரை சாலையின் ஒரு பக்கம் குறிப்பிட்ட இடைவெளியில் அமைச்சர் மற்றும் ஆளுங்கட்சி பிரமுகர்களை வரவேற்று பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அதேபோல் நேற்றும் வேலூர் மண்டி வீதி, அண்ணா சாலை, கருகம்பத்தூர், தொரப்பாடி, கணியம்பாடி, காட்பாடி என வேலூர் நகரில் முக்கிய சாலைகளிலும், சாலை சந்திப்புகளிலும் மரண அறிவிப்பு, ஆளுங் கட்சியினரின் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. திருப்பத்தூரில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி, கிருஷ்ணகிரி சாலை, பஸ் நிலையம் என பல பகுதிகளில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

வேலூர், திருப்பத்தூர் மட்டுமின்றி அரக்கோணம், ஆற்காடு, ஜோலார்பேட்டை, குடியாத்தம் என மாவட்டம் முழுவதுமே சாலைகளை மீண்டும் பிளக்ஸ் பேனர்களும், அரசியல் கட்சிகளின் தோரணங்களும் முளைக்க தொடங்கியுள்ளன. இது பொதுமக்களை மட்டுமின்றி சமூக ஆர்வலர்களையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. எனவே, மீண்டும் ஒரு சென்னை சம்பவம் போல் நடக்காமல் இருக்க உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தும் வகையில் தமிழக அரசும், காவல்துறையும், உள்ளாட்சி அமைப்புகளும் இவ்விஷயத்தில் கடுமை காட்ட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : party banners ,Vellore ,
× RELATED வேலூர் சைதாப்பேட்டையில் பல...