×

சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகளை கோசாலையில் ஒப்படைக்க நடவடிக்கை

கோவை, நவ. 13: பொதுமக்களுக்கு இடையூறாக மாநகராட்சி பகுதிகளில் சுற்றி திரியும் கால்நடைகள் பிடிக்கப்பட்டு கோசாலையில் ஒப்படைக்கப்படும் என மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார்  ஜடாவத் தெரிவித்துள்ளார். கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் சாலையில் கால்நடைகள் சுற்றி திரிவது அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக கால்நடைகளில் எருமை, பசுமாடு, ஆடு, போன்றவை வைசியால் வீதி, ராஜவீதி, உக்கடம், கருப்பண்ண கவுண்டர் வீதி, மேட்டுப்பாளையம் சாலை என பல்வேறு பகுதிகளில் கால்நடைகள் உரிமையாளர்கள் இன்றி சாலையில் அங்கும், இங்குமாக சுற்றி திரிகிறது. சாலைகள் மட்டுமின்றி பொதுஇடங்களிலும் மக்களுக்கும், மாணவ, மாணவிகளுக்கும் இடையூறாக கால்நடைகள் சுற்றி திரிகின்றன. சாலைகளில் செல்லும் கால்நடைகளால் வாகன ஒட்டிகள் நிலை தடுமாறி விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது. கால்நடைகளும் விபத்தால் காயமடைகின்றன.

அதேபோல் கோவை மேட்டுப்பாளையம் சாலை அருகே வெள்ளக்கிணறு பகுதியில் குதிரைகள் சாலையோரங்களில் சுற்று திரிவது வழக்கமாக உள்ளது. அவ்வாறு சுற்றி திரியும் குதிரைகள் சில சமயங்களில் விபத்தில் சிக்கி படுகாயம் அடைகின்றன.  குதிரைகள் சாலைகளில் சுற்றி திரிந்து வாகன ஓட்டிகளை தொந்தரவு செய்கின்றன. குதிரைகளின் உரிமையாளர்கள் யார் என்று தெரிவதில்லை. குதிரைகள் விபத்தில் சிக்கிவிட்டால் அதன் உரிமையாளர் வந்து அந்த குதிரைக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடும் செய்வதில்லை. இதனிடையே இவ்வாறு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் கால்நடைகளை பிடித்து கோசாலைகளில் ஒப்படைக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தெரிவித்துள்ளதாவது : கோவை மாநகராட்சிக்குட்பட்ட பொதுமக்கள் கவனத்திற்கு, மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆடு, மாடு, குதிரை  மற்றும் இதர கால்நடைகளை வளர்ப்பவர்கள் பொது மக்களுக்கும்,  போக்குவரத்திற்கும், பள்ளி மாணவ, மாணவியருக்கும் இடையூறாக பொது இடங்களிலோ  அல்லது சாலைகளிலோ சுற்றித்திரியும்படி விடக்கூடாது என எச்சரிக்கை  செய்யப்படுகிறது.  தங்களது சொந்த இடத்தில் மட்டுமே பராமரிப்பு செய்யவேண்டும். மீறினால் கால்நடைகளை பிடித்து கோசாலையில்  ஒப்படைக்கப்படும். மீண்டும் கால்நடைகளை உரிமை கோரும் உரிமையாளர்களிடம்   திரும்ப ஒப்படைக்க இயலாது.  இவ்வாறு ஷ்ரவன்குமார் ஜடாவத் தெரிவித்துள்ளார்.  கடந்த 8ம் தேதி மாநகராட்சி  ஊழியர்கள் மாநகரின் வைசியால் வீதி, ராஜவீதி, உக்கடம், கருப்பண்ண கவுண்டர்  வீதி உள்ளிட்ட வீதிகளில் உரிமையாளர் இன்றி சுற்றி திரிந்த 5 காளை, 8 பசு என  13 மாடுகளை பிடித்து கோவை வ.உ.சி. உயிரியல் பூங்காவில் ஒப்படைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : roads ,
× RELATED தமிழ்நாட்டில் உள்ள 5...