குழந்தைகளுக்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு

கோவை, நவ. 13: கோவை, திருப்பூர் மாவட்டங்களில் குழந்தைகளுக்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதாக கோவை அரசு மருத்துவமனையின் டீன் தெரிவித்துள்ளார்.  பருவமழையின் காரணமாக கோவை அரசு மருத்துவமனைக்கு டெங்கு, வைரஸ் காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்பினால் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் பலர் சிகிச்சைக்காக வருகின்றனர். தற்போது, பெரியவர்களை விட குழந்தைகள் அதிகளவில் காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டு வருவதாக கோவை அரசு மருத்துவமனையின் டீன் அசோகன் தெரிவித்துள்ளார்.  இது குறித்து அவர் கூறியதாவது: காய்ச்சல் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளும் இல்லாத நிலையை ஏற்படுத்த சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறோம். இதனால், கடந்த ஆண்டைவிட நடப்பாண்டில் டெங்கு உயிரிழப்பு குறைந்துள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக காய்ச்சல் காரணமாக கோவை, திருப்பூரை சேர்ந்த குழந்தைகள் அதிகளவில் சிகிச்சைக்கு வருகின்றனர். இது தொடர்பாக சுகாதாரத்துறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெற்றோர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். காய்ச்சல் பாதிப்பு இருந்தால் உடனடியாக குழந்தைகளை அரசு மருத்துவமனையில் சேர்க்க வேண்டும். ஆரம்ப நிலையில் கண்டறிந்து சிகிச்சை அளித்தால் உயிரிழப்புகளை தடுக்க முடியும். தற்போது, டெங்கு பாதிப்பு குறைந்துள்ளது. அதன்படி, கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு கோவையை சேர்ந்த 7 பேர், திருப்பூரை சேர்ந்த 8 பேர் என மொத்தம் 15 பேரும், வைரஸ் காய்ச்சல் பாதிப்பினால் 146 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: