அனைத்து நிறுவனங்களிலும் உள்புகார் குழு அமைக்க வேண்டும்

கோவை, நவ. 13: ஒவ்வொரு அரசுதுறை மற்றும் தனியார் நிறுவனங்களின் தலைமை அலுவலகங்களிலும் கட்டாயம் உள்புகார் குழு அமைக்கப்பட வேண்டும் என மாவட்ட கலெக்டர் ராஜாமணி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து கலெக்டர் ராஜாமணி தெரிவித்துள்ளதாவது: மத்திய மற்றும் மாநில அரசுகள் பெண்களின் பாதுகாப்பிற்காக பல திட்டங்கள் மற்றும் சட்டங்களை இயற்றியுள்ளது. அதன்படி பணிபுரியும் இடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் வன்முறைகள் தடுப்பதற்காக மத்திய அரசால் பணிபுரியும் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் வன்முறை தடைசட்டம் 2013ம் ஆண்டு நடை முறைபடுத்தப்பட்டது.  இச்சட்டத்தில் பணிபுரியும் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் வன்முறை குறித்து விசாரிக்க விசாரணைக்குழு அனைத்து அரசு துறைகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் அமைக்கப்பட வேண்டும். அவ்வாறு அமைக்கப்படும் விசாரணைக்குழுவின் தலைவராக ஒரு பெண் அலுவலரை நியமிக்க வேண்டும். இரண்டு நபர்களை உறுப்பினர்களாகவும், இத்துரையில் நன்கு பழக்கமான ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தினை உறுப்பினராகவும் சேர்க்க வேண்டும் என விசாரணைக்கான

வழிமுறைகள் பற்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு அரசு துறை மற்றும் தனியார் நிறுவனங்களின் தலைமை அலுவலகங்களிலும் கட்டாயம் உள்புகார் குழு அமைக்கப்பட வேண்டும். அனைத்து தலைமை அலுவலகங்களிலும் புகார் குழு அமைத்து அதன் விபரத்தினை மாவட்ட கலெக்டருக்கு உடனடியாக தெரிவிக்குமாறும், மாதாந்திர அறிக்கையினை ஒவ்வொரு மாதமும் மாவட்ட சமூகநல அலுவலர் கோவை என்ற முகவரிக்கு அனுப்பிவைக்குமாறும் தெரிவிக்கப்படுகிறது. உள்புகார் குழு அமைக்கப்படாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். உள்புகார் குழு அமைப்பது தொடர்பான விபரங்களை மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், கோவை. தொலை பேசி எண் 0422-2305126 என்ற முகவரியில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் ராஜாமணி தெரிவித்துள்ளார்.

Related Stories: