கோவை அரசு மருத்துவமனையில் பெண்ணின் சிறுநீரகத்தில் இருந்த 2 கிலோ புற்றுநோய் கட்டி அகற்றம்

கோவை, நவ. 13:  கோவை அரசு மருத்துவமனையில் 55 வயது பெண்ணின் சிறுநீரகத்தில் இருந்த 2 கிலோ அளவிலான புற்றுநோய் கட்டியை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் வீரம்மாள்(55). கூலி தொழிலாளி. இவருக்கு கடந்த சில மாதங்களாக கடுமையான வயிற்று வலி இருந்து வந்தது. இதைத்தொடர்ந்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.  மருத்துவர்கள் பரிசோதனையில், அவரின் இடது பக்க சிறுநீரகத்தில் 24 செ.மீ. அளவில் சுமார் 2 கிலோ அளவிலான புற்றுநோய் கட்டி இருந்தது தெரியவந்தது. ரத்த குழாய்க்குள் பரவி இருந்தது. அறுவை சிகிச்சையின் மூலம் கட்டியுடன் சேர்ந்து பாதிக்கப்பட்ட ஒரு சிறுநீரகத்தை சிறுநீரக அறுவை சிகிச்சை துறை மருத்துவர் குழுவினர் அகற்றினர். தற்போது, வீரம்மாள் நல்ல நிலையில் இருக்கிறார். இது குறித்து கோவை அரசு மருத்துவமனையின் டீன் அசோகன்  நேற்று கூறியதாவது: வீரம்மாள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வயிற்று வலியுடன் சிகிச்சைக்காக வந்தார். அவருக்கு சி.டி. ஸ்கேன் எடுத்து பார்த்தபோது சிறுநீரகத்தில் 24 செ.மீ. அளவில் புற்றுநோய் கட்டி இருந்தது.

இதனை அறுவை சிகிச்சை செய்துதான் எடுக்க முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால், ரத்த ஓட்டம் மிகவும் அதிகமாக இருந்தது.  வேறு இடத்திற்கு பரவும் வாய்ப்பும் இருந்தது. இதனால், புதிய டெக்னிக் பயன்படுத்தி பைப்லேன் கேத் லேப் மூலமாக சிறுநீரகத்திற்கு செல்லும் ரத்த குழாய்க்குள் ஜெல் அனுப்பி அடைப்பு ஏற்படுத்தப்பட்டது. இதனால், ரத்த கட்டி சிறியதாகியது. ரத்த ஓட்டம் குறைந்தது. பின்னர், ரத்த கட்டி அகற்றப்பட்டது. இதை ஆய்வு செய்தபோது ரீனல் செல் கார்சினோமா வகை புற்றுநோய் என தெரியவந்தது.

நோயாளி தற்போது நலமுடன் இருக்கிறார். அவரின் உடல்நிலை குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். மேலும், கோவை அரசு மருத்துவமனையில் முதல் முறையாக இது போன்ற அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சைக்கு ரூ.3 லட்சம் வரை செலவாகும். கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் இலவசமாக செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அசோகன் கூறினார்.

Related Stories: