×

டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கை சலவைப்பட்டறை உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு

திருப்பூர்:   திருப்பூர், முதலிபாளையம் பகுதியில் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் சாய, சலவை பட்டறை வைத்திருந்த உரிமையாளருக்கு வருவாய் துறையினர் ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர். திருப்பூரில் கடந்த சில மாதங்களாக டெங்கு கொசுப்புழு ஒழிப்பு நடவடிக்கை மும்மரமாக நடந்து வருகிறது. ஆயினும், குறிப்பாக முதலிபாளையம் பகுதியில் டெங்கு பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வந்தது. வடமாநில தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் போதிய விழிப்புணர்வு மற்றும் சுகாதாரம் இல்லாததால் டெங்கு காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டு, திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இதையடுத்து பொதுசுகாதாரத்துறையினர், மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையினர் அப்பகுதியில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு சுகாதாரமற்ற முறையில் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகும் வகையில் பராமரிப்பு இன்றி வைத்திருந்த பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களுக்கு அபராதம் விதித்து வந்தனர். இந்நிலையில் முதலிபாளையம் ஊராட்சியில் டெங்கு கொசு ஒழிக்கும் பணி கடந்த 7ம் தேதி ஊரக வளர்சித்துறையினர் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சாமிநாதன் என்பவருக்கு சொந்தமான சலவை பட்டறையில் உள்ள 8 தொட்டிகளில் மழைநீர் தேங்கி கொசுப்புழுக்கள் உற்பத்தி ஆகியிருந்தது தெரியவந்தது.

 இதையடுத்து சலவை பட்டறையை 24 மணி நேரத்திற்குள் சுத்தம் செய்யவும், ரூ.1 லட்சம் அபராதம் விதித்தும் அதிகாரிகள் உத்தரவிட்டனர். ஆனால் இதனை சலவை பட்டறை உரிமையாளர் பொருட்படுத்தவில்லை. இதையடுத்து, கலெக்டர் விஜயகார்த்திகேயன் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. கலெக்டரின் உத்தரவுப்படி, தனியார் சலவை பட்டறையை வருவாய்த்துறை சட்டப்படி கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சலவை பட்டறை உரிமையாளர் சாமிநாதன் முதலிபாளையம் ஊராட்சியில் ரூ. 1 லட்சம் அபராதம் செலுத்தினார். மேலும் மூடி வைக்காமல் உள்ள சலவை பட்டறை தொட்டிகளுக்கு மூடி போட்டு விடுவதாகவும், ஒருநாள் அவகாசம் கோரினார். இதையடுத்து, நேற்று திருப்பூர் தெற்கு வட்டாட்சியர் மகேஸ்வரன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் கனகராஜ் தலைமையில் மழைநீர் தேங்கியுள்ள அனைத்து தொட்டிகளிலும் மழைநீர் வெளியேற்றப்பட்டு, பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டது. இதையடுத்து கையகப்படுத்தும் நடவடிக்கை கைவிடப்பட்டது.

Tags :
× RELATED பல்லடத்தில் கோடை வெயிலால் காய்ந்த...