×

சின்னமுத்தூர் தடுப்பணை பராமரிப்பு பணியில் முறைகேடு

வெள்ளக்கோவில், நவ. 13:     நொய்யல் ஆற்றில் இருந்து செல்லும் தண்ணீர் காவிரியுடன் கலந்து வீணாகி வந்தது. பாசனத்திற்கு பயன்படும் வகையில் நொய்யல் ஆற்றில் 1992ம் ஆண்டு ரூ.13.51 கோடி செலவில் சின்னமுத்தூர் பகுதியில் தடுப்பணை கட்டப்பட்டது.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகாவில் உள்ள 300 ஏக்கர் பரப்பளவுள்ள அணைப்பாளையம் குளத்துக்கு தண்ணீர் செல்லும் வகையிலும், ஊட்டுக்கால்வாய் மூலம் 20 ஆயிரம் ஏக்கர் பாசனம் பெறும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு ரூ.7 கோடியில் கதவுகள், தரைதளம், மின்மோட்டார் உள்பட அணையில் பரமரிப்பு பணிகள் செய்யப்பட்ட பின் ஷட்டர்கள் உபயோகப்படுத்தாமல் இருந்தது. விவசாயிகள் கோரிக்கையை ஏற்று கடந்த ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி அணை திறக்கப்பட்டது. அப்போது ஷட்டரில் பழுது ஏற்பட்டு, பின் சரிசெய்யப்பட்டது. பின்பு அக்டோபர் 18ம் தேதி திறக்கப்பட்ட போது மீண்டும் ஷட்டரில் பழுது ஏற்பட்டது. மீண்டும் ஷட்டர் சரிசெய்யப்பட்டது.  கார்வழி அணை நிரம்பியதை அடுத்து, கால்வாயில் செல்லும் நீரினை நிறுத்தி மீண்டும் தண்ணீரை நொய்யல் ஆற்றில் திறக்க பொதுப்பணித்துறையினர் தடுப்பணையின் 9 மதகுகளையும் திறந்தபோது, கதவுகளை உயர்த்த உதவும் பற்சக்கரங்களும், இயந்திர பாகங்களும் உடைந்தது.

 இதையடுத்து ஒவ்வொரு முறையும் திருச்சியை சேர்ந்த குவாலிட்டி ஷட்டர்ஸ் ஒப்பந்ததாரர் சரிசெய்வதும், பின் கதவுகளை ஏற்றி இறக்கும்போது பழுதடைவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. மேலும் சாய கழிவுநீர் வருவதால் பாசனத்திற்கு அணை திறக்கவில்லை. அணை புதுப்பிக்கும்போது தரமற்ற பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. அரசு ஒதுக்கிய ரூ.7 கோடி நிதியை அதிகாரிகள் ஒப்பந்ததாரருடன் கூட்டு சேர்ந்து முறைகேடு செய்துள்ளனர். இதனால்தான் கடந்த 3 மாதத்தில் 4 முறை ஷட்டர் பழுதடைந்துள்ளது.   இது குறித்து மாவட்ட நிர்வாகம் முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED கொரோனா வைரஸ் பீதி சுற்றுலாத்தலங்கள் வெறிச்சோடியது