ஈரோடு, நவ.13: ஈரோடு மார்க்கெட்டில் பெரிய வெங்காயம் வரத்து அதிகரிப்பால் விலை குறைந்தது. நேற்று கிலோ ரூ50க்கு விற்பனை செய்யப்பட்டது. ஈரோட்டில் ஆர்கேவி ரோட்டில் உள்ள நேதாஜி தினசரி மார்க்கெட், சின்ன மார்க்கெட், சூரம்பட்டி சந்தை, வார சந்தைகளில் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மார்க்கெட்டுகளில் ஈரோட்டின் சுற்றுப்புற பகுதிகளான சத்தியமங்கலம், பண்ணாரி, தாளவாடி, கொடுமுடி, சாவடிபாளையம் போன்ற பகுதிகளில் இருந்து சின்ன வெங்காயமும், ஆந்திரா, மத்திய பிரதேசம், நாசிக், கர்நாடகா போன்ற வடமாநிலங்களில் இருந்து பெரிய வெங்காயமும் விற்பனைக்கு வருகிறது.இதில், ஈரோடு நேதாஜி தினசரி மார்க்கெட் மிகப்பெரியது என்பதால், பெரிய வெங்காயம் மொத்தமாக இருப்பு வைத்து விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த மாதம் வெங்காயம் உற்பத்தி ஆகும் பகுதிகளில் கனமழை பெய்ததால் அங்கிருந்து ஈரோட்டிற்கு வெங்காயம் வரத்து குறைந்தது. இதனால், கடந்த வாரம் வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து கிலோ ரூ.70 முதல் ரூ.80 வரை விற்பனையானது.