ஈரோடு மாநகர பகுதிகளில் 7 நாளில் 71 பவுன் நகை, ரூ.8.47 லட்சம் கொள்ளை

ஈரோடு, நவ.13: ஈரோடு மாநகர பகுதிகளில் கடந்த 7 நாளில் மட்டும் பல்வேறு வழிப்பறி, கொள்ளை சம்பவங்களில் 71 பவுன் நகை, ரூ.8.47 லட்சம் ரொக்கம் கொள்ளை போனது. தொடர் குற்றச்சம்பவங்களால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். ஈரோடு மாநகர பகுதிகளில் தொடர்ந்து கொள்ளை, வழிப்பறி சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. மாவட்டம் முழுவதும் குற்றச்சம்பவங்களை கண்டறிந்து குற்றவாளிகளை பிடிக்க 12,000 சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.  மாநகர பகுதிகளில் ஆங்காங்கே வாகன எண்ணை பதிவு செய்யும் கேமராக்களும் பொருத்தப்பட்டு உள்ளது. இதுதவிர சட்டம், ஒழுங்கு போலீசாருடன் போக்குவரத்து போலீசாரும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.  இவ்வளவு கெடுபிடி இருந்தும் கடந்த 7 நாளில் ஈரோடு மாநகர பகுதிகளில் தொடர் வழிப்பறி, கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளது. ஈரோடு அருகே கருங்கல்பாளையம் பூங்குன்றார் வீதியைச் சேர்ந்த தங்கமணி (57) என்பவர் கோயிலுக்கு சென்றுவிட்டு நடந்து சென்றபோது அவர் கழுத்தில் இருந்த 10 பவுன் நகையை பறித்துள்ளனர்.

ஈரோடு கொல்லம்பாளையம் பார்வதிகிருஷ்ணன் வீதியைச் சேர்ந்த மூதாட்டி சரஸ்வதியிடம் (71), முகவரி கேட்பது போல் 6 பவுன் தங்க தாலிக்கொடியையும், ஈரோடு சுப்பிரமணியகவுண்டன்வலசு பகுதியைச் சேர்ந்த சிவகாமசுந்தரி (47) என்பவரிடம் 4 பவுன் தங்கசெயினையும், ஈரோடு நாடார்மேடு பகுதியைச் சேர்ந்த மாலதி (45) ஸ்டேட் பேங்க் ரோடு வழியாக நடந்து வந்தபோது அவர் கழுத்தில் இருந்த 2.5 பவுன் தங்கசெயினையும் பறித்துள்ளனர். ஈரோடு பழனிகவுண்டர் வீதியைச் சேர்ந்த மல்லேஸ்வரி (32) கழுத்தில் அணிந்திருந்த 5.5 பவுன் நகையை பைக்கில் வந்த கொள்ளையர்கள் பறித்துவிட்டு தப்பிச் சென்றனர். இந்த வழிப்பறி சம்பவங்கள் மட்டுமின்றி, வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கும் சம்பவமும் தொடர்ந்து நடந்து வருகிறது.

ஈரோடு பெரியசேமூர் கொங்கு வேளாண் நகரைச்சேர்ந்த பிளீச்சிங் பட்டறை உரிமையாளர் மணி (55) என்பவர் தனது குடும்பத்துடன் சென்னிமலையில் உள்ள உறவினர் வீட்டு விஷேசத்திற்கு சென்றபோது வீட்டு பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த 12.5 பவுன் நகை மற்றும் 8 லட்சம் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றனர்.  ஈரோடு கனிராவுத்தர்குளம் தட்டாங்காட்டு பகுதியைச் சேர்ந்த தனியார் ஸ்பின்னிங் மில் மேலாளர் சண்முகசுந்தரம் (44), குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தபோது 26 பவுன் நகை, ரூ.40 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்துள்ளனர்.  ரோட்டில் நடந்து சென்ற பெண்களிடமும், வீட்டின் பூட்டை உடைத்தும் கொள்ளையடித்த மர்ம நபர்கள், பஸ்சில் சென்ற பெண்ணிடமும் தங்களின் கைவரிசையை காட்டி உள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த சுப்பு மனைவி பாப்பாத்தி (50), திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக திருப்பூர் சென்றார்.

விழா முடிந்து ஈரோட்டில் ஜவுளி வாங்குவதற்காக வந்தபோது அவர் மடியில் வைத்திருந்த பர்ஸ் காணாமல் போனது. இதில், 4.5 பவுன் நகையும், ரூ.7,500 பணமும் இருந்தது. நகை, பணத்துடன் யாரோ பர்சை திருடியது தெரியவந்தது.கடந்த 7 நாளில் மட்டும் ஈரோடு மாநகர பகுதிகளில் வழிப்பறி, கொள்ளை சம்பவங்களில் 71 பவுன் நகையும், 8 லட்சத்து 47 ஆயிரத்து 500 ரூபாய் பணமும் கொள்ளை போனது. தொடர்ந்து நடந்து வரும் குற்றச் சம்பவங்களால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். இதைத்தடுக்க, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: