ரூ.100 கோடியில் திட்டப்பணிகள் அறிக்கை தயாரித்து அனுப்ப உத்தரவு

ஈரோடு, நவ.13: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.100 கோடி திட்டப்பணிகள் குறித்து அறிக்கை தயாரித்து அனுப்ப, ஈரோடு மாநகராட்சியில் நடந்த ஸ்மார்ட் சிட்டி பொதுக்குழு கூட்டத்தில் உத்தரவிடப்பட்டது.  மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் ஈரோடு மாநகராட்சியில் பல்வேறு திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இதுதொடர்பான முதலாவது பொதுக்குழு கூட்டம், ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக ஈரோடு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் தலைவரும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குநருமான டாக்டர் மகேஸ்வரன் கலந்துகொண்டு திட்டப்பணிகள் குறித்து விளக்கி பேசியதாவது:மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் ஈரோடு மாநகராட்சிக்கு ரூ.926 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், முதல்கட்டமாக ரூ.100 கோடி நிதி ஒதுக்கப்பட்டு இந்த நிதியை கொண்டு பூங்கா அமைப்பது, மைக்ரோ கம்போஸ்டிங் சென்டர் அமைத்து குப்பைகளை தரம் பிரிப்பது, ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகள், ஸ்மார்ட் ரோடுகள், வைராபாளையம், வெண்டிபாளையம் பகுதியில் சேர்ந்துள்ள பழைய குப்பைகளை பயோமைனிங் முறையில் உரமாக்கும் பணிகள் போன்றவை நடந்து வருகிறது.

தற்போது நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். முடிக்கப்பட்ட பணிகளை தொடர்ந்து பராமரிக்க வேண்டும். பொதுமக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் அதிகாரிகள் சிறப்பாக செயல்படுத்த வேண்டும். அடுத்த நிதியாக ரூ.100 கோடி நிதி ஒதுக்கப்பட உள்ளது. இந்த நிதியை கொண்டு என்னென்ன பணிகள் செய்ய வேண்டும் என்பது குறித்த திட்ட அறிக்கையை விரைவாக தயார் செய்து அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதைத்தொடர்ந்து, ஈரோடு அருகே வைராபாளையத்தில் பயோமைனிங் முறையில் குப்பையில் இருந்து உரமாக்கும் கிடங்கினை ஈரோடு ஸ்மார்ட் சிட்டி தலைவர் டாக்டர் மகேஸ்வரன் பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மத்திய அரசின் நகர்ப்புற போக்குவரத்துதுறை சார்பு அலுவலர் சங்கர், மாநில நிதித்துறை அலுவலர் சீனிவாசன், மாநகராட்சி பொறியாளர் மதுரம், செயற்பொறியாளர் விஜயகுமார், உதவி செயற்பொறியாளர் கோபிநாத்  உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: