×

நாகர்கோவில் அருகே இறைச்சி கழிவுகள் ஏற்றி வந்த டெம்போ சிக்கியது: ₹15 ஆயிரம் அபராதம்

தென்தாமரைக்குளம்,  நவ.13:  கேரளாவில்  இருந்து இறைச்சி கழிவுகள் ஏற்றி வந்த டெம்ேபாவை, அதிமுக மாவட்ட செயலாளர் மற்றும் பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். கேரளாவில் இருந்து இறைச்சி கழிவுகள் குமரி மாவட்டத்துக்குள் கொண்டு வரப்பட்டு சாலை ஓரங்களிலும், நீர்நிலைகளிலும் ரகசியமாக கொட்டப்படுகின்றன. களியக்காவிளையில் தொடங்கி குமரி - கேரள எல்லை பகுதியில் 33 சோதனை சாவடிகள் உள்ளன. இந்த சோதனை சாவடிகளை எல்லாம் கடந்து இறைச்சி கழிவு வாகனங்கள் குமரி மாவட்டத்துக்குள் நுழைகின்றன. நள்ளிரவிலும், அதிகாலையிலும் இது போன்ற வாகனங்கள் வருவதால் துர்நாற்றத்தால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். இந்த நிலையில் குமரி மாவட்ட அதிமுக செயலாளரும், மாவட்ட பால் வள தலைவருமான அசோகன் நேற்று அதிகாலை 5.30 மணியளவில் காரில், சுசீந்திரம் அருகே உள்ள தனது வயலுக்கு சென்று கொண்டு இருந்தார்.

இடலாக்குடி அருகே செல்லும்போது முன்னால் சென்ற டெம்போவில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அந்த டெம்போவை நிறுத்துமாறு, அசோகன் மற்றும் காரில் இருந்தவர்கள் சைகை செய்தனர். ஆனால் டிரைவர் டெம்போவை நிறுத்தாமல் வேகமாக சென்றார். இதையடுத்து அந்த டெம்போவை துரத்தி ஈத்தங்காடு அருகே மறித்தனர். பின்னர் பொதுமக்கள் உதவியுடன் டெம்போ டிரைவரையும், கிளீனரையும் பிடித்து விசாரித்தபோது, அதில் இறைச்சி கழிவுகள் இருந்தது தெரிய வந்தது. உடனடியாக சம்பவ இடத்துக்கு நெடுஞ்சாலை ரோந்து போலீசார் வந்தனர். டெம்போ டிரைவரிடம் விசாரித்தபோது, நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள பன்றி பண்ணைக்கு இறைச்சி கழிவுகளை கொண்டு செல்வதாக கூறினார். டெம்போ பிடிபட்ட பகுதி தென்தாமரைக்குளம் போலீசுக்கு உட்பட்டது என்பதால், தென்தாமரைக்குளம் போலீசார் வந்து விசாரித்தனர். இதில் டெம்போ டிரைவர் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் குன்னத்தூர் இடையன்வீடு பகுதியை சேர்ந்த ரதீஷ்(37) மற்றும் கிளீனர் பிரசாந்த்( 19) என்பது தெரியவந்தது.

குலசேகரபுரம் ஊராட்சி செயலர் சங்கரி சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் புஷ்பலதாவிடம் புகார் செய்தார். இதையடுத்து அந்த டெம்போவுக்கு ₹15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இறைச்சி கழிவுகள் அனைத்தும் மணக்குடி காயல் அருகே குழி தோண்டப்பட்டு மண்ணில் புதைக்கப்பட்டது. இதற்கான செலவும் டெம்போ டிரைவரிடம் இருந்து வசூலிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து அதிமுக மாவட்ட செயலாளர் அசோகன் கூறுகையில், கேரளாவில் இருந்து இறைச்சி கழிவுகள் குமரி மாவட்டத்துக்குள் வருகின்றன. இடையில் ஏராளமான சோதனை சாவடிகளும் இருக்கின்றன. எனவே போலீசார் இதை கண்காணித்து இறைச்சி கழிவு வாகனங்களை குமரி மாவட்டத்துக்குள் அனுமதிக்க கூடாது. இது தொடர்பாக எஸ்.பி.யை சந்தித்து புகார் அளிப்போம் என்றார்.

Tags : Nagercoil ,
× RELATED நாகர்கோவிலில் சுற்றி திரிந்த 13 நாய்களுக்கு கருத்தடை