சிவந்திபுரம் அருகே கழிவுநீரோடை இல்லாததால் வீடுகளை சூழ்ந்த மழைநீர்

வி.கே.புரம், நவ. 13: சிவந்திபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட புலவன்பட்டி மூர்த்தி சுவாமி கோயில் தெருவை அடிக்கடி மழைநீர் சூழ்வதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வி.கே.புரம் அருகே சிவந்திபுரம் ஊராட்சிக்குட்பட்ட புலவன்பட்டி மூர்த்தி சுவாமி கோயில் தெருவில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இவ்வீடுகளில் உள்ள கழிவுநீர், மழைநீர் வெளியேற கழிவுநீர் கால்வாய் இல்லாததால் தெருக்களில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் இத்தெருவிலுள்ள மக்கள் மழை காலத்தில் வீட்டைவிட்டு வெளியே வரமுடிவதில்லை. இந்நிலையில் வி.கே.புரம் மற்றும் சிவந்திபுரம் பகுதியில் கடந்த வாரம் மழையால் புலவன்பட்டி மூர்த்தி சுவாமி கோயில் தெருவில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.  வீட்டிற்குள் மழைநீர் புகும் அளவிற்கு தண்ணீர் பெருக்கெடுத்தது.

இதனையடுத்து தெருவிலுள்ள  ஞானதிரவியம், ஜெயக்குமார் ஆகியோரது வீட்டில் உள்ள தடுப்பு சுவரில் துளையிட்டு மழைநீரை மக்கள் அகற்றினர். இதனால் வீடுகளுக்கு வெள்ளம் புகாமல் தடுக்கப்பட்டது.  இதுபற்றி அப்பகுதி பெண்கள் கூறியதாவது: ‘கடந்த 20ஆண்டுகளுக்கு மேல் எங்கள் பகுதியில் கழிவுநீர் கால்வாய் கட்ட வேண்டும் என்று ஊராட்சியிலும், அம்பை ஒன்றிய அதிகாரிகளிடமும் பலமுறை முறையிட்டும் இதுவரை கழிவு நீர்ஓடைகள்  கட்டப்படவில்லை. இதனால் மழை காலங்களில் எங்கள் பகுதியில் டெங்கு  காய்ச்சல் பரவுகிறது. எனவே  அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து  எங்கள் தெருவில் கழிவுநீர் கால்வாய் கட்டித்தர வேண்டும்’ என வலியுறுத்தினர்.

Related Stories:

>