×

தூத்துக்குடியில் தண்ணீர் லாரி மோதி அகில இந்திய வானொலி நிலைய அறிவிப்பாளர் பலி

தூத்துக்குடி, நவ.13:தூத்துக்குடியில் தண்ணீர் லாரி மோதி ஓய்வு பெற்ற வானொலி நிலைய அறிவிப்பாளர் பலியானார். தூத்துக்குடி அகில இந்திய வானொலி நிலைய ஊழியர்கள் குடியிருப்பைச் சேர்ந்தவர் விஜயகுமார்(62). வானொலி நிலையத்தில் அறிவிப்பாளராக பணியாற்றி வந்த இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றார். தற்போது பகுதி நேரமாக அங்கு பணியாற்றி வந்தார். இவருக்கு அல்போன்ஸ் என்ற மனைவியும் 2 மகள்கள், ஒரு மகனும் உள்ளனர். நேற்று காலையில் இவர் ஹோட்டலுக்கு செல்வதற்காக பைக்கில் பாளை ரோட்டிற்கு வந்தார். அங்குள்ள எம்ஜிஆர் பூங்கா அருகே வந்தபோது அவ்வழியாக சென்ற தண்ணீர் லாரி, எதிர்பாராத விதமாக விஜயகுமார் ஓட்டி சென்ற பைக் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் தென்பாகம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து விஜயகுமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருந்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் தூத்துக்குடி அம்பேத்கர் நகரைச் சேர்ந்த ரமேஷ்(45) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். விபத்தின்போது விஜயகுமார் ஹெல்மெட் அணிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : station announcer ,All India Radio ,Tuticorin ,
× RELATED தூத்துக்குடியில் பணப்பட்டுவாடா செய்ததாக ஒருவர் கைது!!