×

எட்டயபுரம் அருகே சாலை மற்றும் பஸ் வசதி கோரி அதிகாரிகளை முற்றுகை

எட்டயபுரம், நவ.13: எட்டயபுரம் அருகே சாலை மற்றும் பஸ் வசதி கேட்டு மறியலில் ஈடுபட முயன்றவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த முயன்ற அதிகாரிகளை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். எட்டயபுரம் அருகே குமாரகிரி புதூர் விலக்கில் கோவில்பட்டி -எட்டயபுரம் சாலையில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் கிராம மக்கள் சாலை, பஸ் வசதி கேட்டு நடந்த போராட்டத்துக்கு  தாலுகா இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, தலைமை வகித்தார். ஈராச்சி கிளை செயலாளர் பால்பாண்டி, கசவன்குன்று கிளை செயலாளர் சுப்புராஜ், அஞ்சரான்பட்டி கிளை செயலாளர் சுப்பிரமணி, செமப்புதூர் கிளை செயலாளர் உமையராஜ் முன்னிலை வகித்தனர். மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் நல்லையா, தாலுகா குழு குருநாதன், ஏஐஒய்எப் தேசிய குழு உறுப்பினர் பாலமுருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.

கோவில்பட்டியிலிருந்து கீழஈராலுக்கு கசவன்குன்று செமப்புதூர், அஞ்சுரான்பட்டி, வழியாக  செல்லும் அரசு பஸ்சையும், கோவில்பட்டியிலிருந்து  துறையூர், ஈராச்சி வழியாக ராஜாபட்டி செல்லும் அரசு பஸ்சையும், மீண்டும் இயக்கவேண்டும் என்றும் கொடுக்காம்பாறை, கசவன்குன்று, டி,சண்முகபுரம் செல்லும் சாலையை சீரமைக்க வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட்  கட்சியினர் சாலைமறியல் போராட்டம் நடத்தபோவதாக அறிவித்திருந்தனர். இதனையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சமாதானகூட்டத்திற்கு அதிகாரிகள் வராததால் நேற்று அறிவித்தபடி கட்சியினர் மற்றும் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதனையடுத்து எட்டயபுரம் இன்ஸ்பெக்டர் கலா மற்றும் போலீசார் பொது மக்களிடம்  பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் பொதுமக்கள்  சாலையோரம் நின்று கோசங்கள் எழுப்பியபடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

எட்டயபுரம் தாசில்தார் அழகர், கோவில்பட்டி பிடிஓ கிரி, அரசு போக்குவரத்து கழக கோவில்பட்டி பணிமணை மேலாளர் பொன்ராஜ், எட்டயபுரம் ஆர்ஐ பிரபாகர், விஏஓ முத்துகுமார், உள்பட அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த விரைந்து வந்தனர்.  அதிகாரிகளை  கிராமமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.  இதனால் சிறிதுநேரம்  பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து  நிறுத்திய பஸ்களை தொடர்ந்து இயக்குவதாகவும், சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அதிகாரிகள்  உறுதியளித்ததையடுத்து  பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.

ஆர்டிஓ புறக்கணிப்பு
கிராம மக்கள் தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய போது அந்த வழியாக சென்ற கோவில்பட்டி ஆர்டிஓ  விஜயா கிராமமக்களை சமாதானபடுத்த நடவடிக்கை எடுக்காமல் தாசில்தாரை மட்டும் அழைத்து பேசிவிட்டு சென்றார். ஐந்து கிராம மக்கள் திரண்டு சாலை மறியல் போராட்டம் நடத்திய நிலையில் ஆர்டிஓ கண்டுகொள்ளாமல் சென்றது பொது மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.

Tags : Siege ,road ,Ettiyapuram ,bus facility ,
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...