டெங்கு கொசுப்புழு உற்பத்தி கோவில்பட்டி தீப்பெட்டி ஆலை, வீடுகளுக்கு அபராதம் விதிப்பு

கோவில்பட்டி, நவ.13: கோவில்பட்டியில் டெங்கு கொசுப்புழு உற்பத்தியாக தொட்டிகளில் மழைநீரை தேக்கி வைத்திருந்த தீப்பெட்டி தொழிற்சாலை, பழைய இரும்புகடை, வீட்டு உரிமையாளர்களுக்கு நகராட்சி மூலம் அபராதம் விதிக்கப்பட்டது. கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளிலும் டெங்கு தடுப்பு நடவடிக்கை பணிக்காக 85 களப்பணியாளர்கள், 48 டெங்கு தடுப்பு களப்பணி மேற்பார்வையாளர்கள் வீடுகள்தோறும் சென்று, டெங்கு காய்ச்சலை பரப்புகின்ற ஏடிஸ் வகை கொசுப்புழுக்கள் உருவாகாமல் இருப்பதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நகராட்சி சுகாதார பிரிவு அதிகாரிகள் சாத்தூர் ரோட்டில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள சிமென்ட் தொட்டிகளில் தேங்கியுள்ள மழைநீரில் டெங்கு கொசுப்புழு இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து அந்த ஆலைக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. கோவில்பட்டி பாரதிநகர் கருமாரியம்மன் கோயில் தெருவில் உள்ள 2 வீடுகளில் கீழ்மட்ட நீர்த்தேக்க தொட்டியில் தேக்கி வைக்கப்பட்டிருந்த தண்ணீரில் டெங்கு கொசுப்புழு இருப்பது கண்டறியப்பட்டு, அந்த வீடுகளுக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல் கோவில்பட்டி பண்ணை தோட்ட தெருவில் உள்ள பழைய இரும்புகடையில் நகராட்சி சுகாதார பிரிவு அதிகாரிகள் ஆய்வில், தேங்கிய தண்ணீரில் டெங்கு கொசுப்புழு இருப்பது தெரியவந்ததையடுத்து, இக்கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Related Stories: