×

தூத்துக்குடியில் பயிற்சி பெற்ற 347 பள்ளி ஆசிரியர்களுக்கு தொடக்க கல்வி பட்டய சான்றிதழ்

தூத்துக்குடி, நவ.13:தூத்துக்குடியில் பயிற்சி பெற்ற 347 ஆசிரியர்களுக்கு தொடக்க கல்வி பட்டய சான்றிதழ்களை கலெக்டர் சந்தீப்நந்தூரி வழங்கினார்.
தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் தனியார் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு தொடக்க கல்வி பட்டய சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமை வகித்து பயிற்சி முடித்த 347 ஆசிரியர்களுக்கு தொடக்க கல்வி பட்டய சான்றிதழ்களை வழங்கி பேசியதாவது, இந்திய அளவில் தொடக்க கல்வி ஆசிரியர்களாக பணிபுரியும் அனைவரும் குறைந்தபட்ச பயிற்சியை பெற்றிருக்க வேண்டும் என்ற அடிப்படையில் மனிதவள மேம்பாட்டுத்துறை தொடக்கக்கல்வி பட்டயப்பயிற்சி மற்றும் ஆசிரியர் தொழில்முறை பயிற்சி உள்ளிட்டவைகளை இணைதளம் மூலம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்ட ஆசிரியர்களுக்கு தொடக்க கல்வி பட்டய சான்றிதழ்களுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆசிரியர்களுக்கு குறைந்தபட்ச தகுதி இருக்க வேண்டும் என்பதற்காக இப்பயிற்சி முக்கியமாகும். எனவே ஆசிரியர்கள் இதனை பயன்படுத்தி பயிற்சியை முடித்து தொடர்ந்து பணியாற்றலாம். இப்பயிற்சியை முடித்தவர்கள் மட்டும் பள்ளிகளில் பணியாற்றிட அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஒருமுறை இச்சான்றிதழ் பெற்றவர்கள் வேறு பள்ளிகளுக்கு வேலைவாய்ப்புக்கு செல்லும்போதும் முன்னுரிமை அளிப்பார்கள். தொடக்க கல்வி பட்டய சான்றிதழ் பெற்றவர்கள்தான் தொடர்ந்து பணியாற்ற முடியும். தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்வெழுதிய 394 ஆசிரியர்களில் 347 பேர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் ஆசிரியர் தொழில்முறை பயிற்சியில் 71 நபர்கள் பங்கேற்று 66 பேர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆசிரியர்கள் தொடர்ந்து காலத்திற்கேற்ப அறிவுத்திறனை வளர்த்து புதிய தொழில்நுட்பங்களை அறிந்து கற்பிக்க வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஞானகவுரி, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட அலுவலர் சுப்பிரமணியன், தூத்துக்குடி நகர்ப்புற வட்டார கல்வி அலுவலர் ஜெயபாலன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜசெல்வி மற்றும் திருச்செந்தூர், தூத்துக்குடி நகர்புறம், வைகுண்டம், கோவில்பட்டி வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் பங்கேற்றனர்.

Tags : school teachers ,Thoothukudi ,
× RELATED தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் முப்பெரும் விழா