ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி சிவன் கோயில்களில் அன்னாபிஷேக விழா

வைகுண்டம், நவ.13:ஐப்பசி மாதத்தில் வரும் பவுர்ணமியையொட்டி வைகுண்டம் பகுதி சிவன் கோயில்களில் அன்னாபிஷேக விழா நடந்தது.

ஐப்பசி மாதத்தில் வரும் பவுர்ணமி சிவபெருமானுக்கு உகந்த நாளாகும். இந்நாளில் சிவபெருமானை அன்னம் படைத்து வழிபட்டால் வாழ்வில் அனைத்து விதமான ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது ஐதீகமாகும். இதன்படி, நேற்று வைகுண்டம் கைலாசநாதர் உடனுறை சிவகாமி அம்மாள் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதனைத்தொடர்ந்து சிவபெருமான் அன்ன அலங்காரத்தில் காட்சி அளித்தார். இதனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வழிபட்டனர். வைகுண்டம் அருகேயுள்ள மளவராயநத்தத்திலுள்ள சுகர் நோயை போக்கும் தென்னகர் சிவன் கோயில் அமைந்துள்ளது. ஆன்மிக சிறப்புபெற்ற இக்கோயிலில் சிவபெருமான் அறம்வளர்த்த நாயகி அம்பாளுடன் எழுந்தருளியுள்ளார்.

இக்கோயிலில் அன்னாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. விழாவினை முன்னிட்டு சிவபெருமானுக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷே வழிபாடுகளும், அதனைத்தொடர்ந்து அன்னத்திலான சிறப்பு அலங்கார வழிபாடுகளுடன் தீபாராதனை நடந்தது. சிவபெருமான் அன்ன அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். அதன்பின்பு பக்தர்களுக்கு அன்னம் பிரசாதமாக வழங்கப்பட்டது. திருக்கோளூரிலுள்ள சிவகாமி அம்மாள் உடனுறை சேரசோழ பாண்டீஸ்வரர் சிவன் கோயிலிலும், ஆழ்வார்தோப்பு அறம்வளர்த்தநாயகி சமேத ஏகாந்தலிங்க சுவாமி (காந்தீஸ்வரன்) கோயிலிலும் உள்ளிட்ட பல்வேறு சிவன் கோயில்களிலும் அன்னாபிஷேக விழா சிறப்பாக நடந்தது. இதில் திராளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

தூத்துக்குடி:தூத்துக்குடியில் பிரசித்திபெற்ற சங்கரராமேஸ்வரர் கோயிலில் ஐப்பசி பவுணர்மியை முன்னிட்டு சுவாமிக்கும் அம்பாளுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் சிவனுக்கு அன்னாபிஷேகம், மாவிளக்கு பூஜை உள்ளிட்டவை நடந்தது. மாலை 5 மணிக்கு அன்னாபிஷேக அலங்காரத்தில் சுவாமி -அன்னை பாகம்பிரியாள் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். விழாவை முன்னிட்டு காலை முதல் மாலை வரை சுவாமி தரிசனத்திற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. விழாவில், பெண்களுக்கு மஞ்சள், வளையல் பிரசாதம் வழங்கப்பட்டது. இந்நாளில் சுவாமி, அம்பாளை வழிபட்டால் திருமண தடை நீங்கும் என்ற ஐதீகம் உள்ளது. இதனால் கோயிலில் பெண்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

 ஏற்பாடுகளை செல்வம் பட்டர் தலைமையில் அன்னாபிஷேக கமிட்டியினர் செய்திருந்தனர்.

கோவில்பட்டி:கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயிலில் பூவனநாத சுவாமிக்கு அன்னாபிஷேகம் நடந்தது. இதில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.

கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலில் ஐப்பசி மாதம் பவுர்ணமியையொட்டி அன்னாபிஷேகம் நடந்தது. இதையொட்டி காலை 9 மணிக்கு பூவனநாத சுவாமிக்கு சிறப்பு ஹோமமும், 10.30 மணிக்கு சிறப்பு அபிஷேகமும் பின்னர் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. இதையடுத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் கோயில் செயல் அலுவலர் ரோஜாலி, தலைமை எழுத்தர் ராமலிங்கம், முன்னாள் அறங்காவலர்குழு உறுப்பினர் திருப்பதிராஜா உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

Related Stories: