தூத்துக்குடி புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பொன்விழா

தூத்துக்குடி, நவ.13:தூத்துக்குடி மில்லர்புரத்திலுள்ள புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டங்கள் 14,15ம்தேதிகளில் நடக்கிறது. நாளை (14ம்தேதி) காலை 9.30 மணிக்கு துவக்க விழாவில் கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமை வகித்து மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி சமூக ஆர்வலர்களை கவுரவிக்கிறார். பாளையங்கோட்டை திருஇருதய சகோதரர்கள் சபை தலைவர் வேளாங்கண்ணி கவுசானல் மாநில தலைவர் கஸ்மீர், ஆஞ்சலோ மாநில தலைவர் அந்தோணிராஜ் முன்னிலை வகிக்கின்றனர். பள்ளி தாளாளர் ஜோசப் வரவேற்கிறார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி, மாவட்ட கல்வி அலுவலர் வசந்தா வாழ்த்துரை வழங்குகின்றனர்.

தலைமையாசிரியர் மரியஜோசப் அந்தோணி நன்றி கூறுகிறார். தொடர்ந்து 11 மணிக்கு மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் நன்றி திருப்பலியும், மதியம் 2.30 மணிக்கு மரம் வளர்ப்போம், மனிதம் காப்போம் என்ற தலைப்பில் சித்ராவும், நாட்டுப்புற பாடல்களில் மாணவர்கள் பங்கு என்ற தலைப்பில் சந்திரபுஷ்பமும் பேசுகின்றனர். மாலை 6 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. 15ம்தேதி காலை 9 மணிக்கு எஸ்பி அருண்பாலகோபாலன் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைக்கிறார். கொல்கத்தா புனித சவேரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் பெலிக்ஸ்ராஜ் தலைமை வகிக்கிறார். மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன் முன்னிலை வகிக்கிறார். தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடக்கிறது.

மாலை 2.30 மணிக்கு பிச்சுமணி உரையாற்றுகிறார். தொடர்ந்து பொன்விழா நிறைவு நிகழ்ச்சியில்  ஆண்டு மலர் வெளியிடப்படுகிறது. இதில் முன்னாள் திருஇருதய சபை அதிபர்கள் விக்டர், ஜெயராஜ், ஜேசுதாஸ், விக்டர்தாஸ் வாழ்த்துரை வழங்குகின்றனர். ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Related Stories: