×

பூரிக்கட்டையால் அடித்து கொன்றுவிட்டு உடல்நிலை பாதிப்பால் மனைவி இறந்ததாக நாடகமாடியவர் கைது

திருவொற்றியூர்: குடும்ப தகராறில் பூரிக்கட்டையால் மனைவியை அடித்து கொன்றுவிட்டு, உடல்நிலை பாதிப்பால் இறந்ததாக நாடகமாடிய கணவன் கைது செய்யப்பட்டார்.திருவொற்றியூர் ராஜேஸ்வரி நகரை சேர்ந்தவர் ஏழுமலை (40). இவருக்கும், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு கோவிலூர் கிராமத்தை சேர்ந்த வனிதா (32) என்பவருக்கும், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. தம்பதிக்கு,  யோகேஷ்வரன், மாதேஸ்வரன் என்ற 2 மகன்கள் உள்ளனர்.கருத்து வேறுபாடு காரணமாக, தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதுபோன்ற நேரங்களில் ஏழுமலை தனது மனைவியை அடிப்பார், என்று கூறப்படுகிறது. இதுபற்றி வனிதா தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.  அவர்கள், ஏழுமலையிடம் பேசி சமாதானம் செய்து வைத்துள்ளனர். இந்நிலையில், கடந்த 3ம் தேதி வனிதாவின் பெற்றோரை செல்போனில் தொடர்புகொண்ட ஏழுமலை, ‘‘உடல் நலக்குறைவால் வனிதா இறந்து விட்டாள்,’’ என கூறி அழுதுள்ளார். பின்னர், தனியார் ஆம்புலன்ஸ் மூலம் வனிதாவின் உடலை   எடுத்துக் கொண்டு திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு  கோவிலூர் கிராமத்திற்கு கொண்டு சென்றுள்ளார். அப்போது, வனிதாவின் இறப்பில் மர்மம் இருப்பதாக, அவரது தந்தை குப்புசாமி திருவண்ணாமலை போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், திருவண்ணாமலை போலீசார் இதுபற்றி திருவொற்றியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

பின்னர், வனிதாவின் உடலை கைப்பற்றி, ஆம்புலன்ஸ் மூலம் மீண்டும் திருவொற்றியூர் காவல் நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். திருவொற்றியூர் போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு  ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.இந்நிலையில், வனிதாவின் பிரேத பரிசோதனை  அறிக்கையில், தலையில் பூரிக்கட்டையால் அடிக்கப்பட்டதால் அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இதுபற்றி போலீசார் ஏழுமலையிடம் விசாரித்தபோது, ‘‘எனக்கும், மனைவி வனிதாவுக்கும்  தகராறு ஏற்பட்டபோது, ஆத்திரத்தில் வீட்டில் இருந்த பூரிக்கட்டையை எடுத்து வனிதாவின் தலையில் சரமாரியாக அடித்தேன்.இதில், காயமடைந்த வனிதாவை மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல், அருகில் உள்ள மெடிக்கல் ஷாப்பில் இருந்து மருந்து மாத்திரைகளை வாங்கி கொடுத்தேன். ஆனாலும் அவருக்கு தலை வலியும், அடிக்கடி மயக்கமும் ஏற்பட்டு  வந்தது. சில நாட்களில் உடல் நிலை மிகவும் மோசமடைந்து இறந்தார். இதுபற்றி உறவினர்களிடம் தெரிவித்தால், என்னை கைது செய்துவிடுவார்கள், என்று உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மனைவி இறந்து விட்டதாக கூறினேன்,’’ என  தெரிவித்துள்ளார்.இதையடுத்து நேற்று முன்தினம் போலீசார் இந்த  வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து, ஏழுமலையை கைது செய்தனர்.


Tags :
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்...