×

கொடுங்கையூர் சின்னாண்டி மடம் பகுதியில் மர்ம காய்ச்சலுக்கு 5 வயது சிறுமி பலி

சென்னை : கொடுங்கையூரில் மர்ம காய்ச்சலுக்கு 5 வயது சிறுமி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடரும் உயிரிழப்பால் அந்த பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.சென்னை கொடுங்கையூர் சின்னாண்டி மடம், கடும்பாடி அம்மன் கோயில் 4வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் காளிமுத்து (34). டிரைவர். இவரது மனைவி இந்திராதேவி. தம்பதியின் மகன் சபரி சரண் (7), மகள் கனிஷ்கா (5). கடந்த 5 நாட்களாக  கனிஷ்காவிற்கு காய்ச்சல் இருந்தது. இதனால், அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். நேற்று காய்ச்சல் அதிகரிக்கவே உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு மருத்துவமனையில் சேர்த்த சிறித  நேரத்தில் சிறுமி பரிதாபமாக பலியானாள். இதனை கண்டு பெற்றோர்கள் கதறி அழுதனர்.
இதுகுறித்து சிறுமியின் உறவினர்கள் கூறுகையில், “கொடுங்கையூர் குப்பை கிடங்கில் இருந்து அதிகளவில் கொசு உற்பத்தியாகி சுற்றுப்பகுதி வீடுகளுக்கு படையெடுப்பதால், நோய் பாதிப்பில் தவித்து வருகிறோம். இதுகுறித்து பலமுறை  மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை.

உயிரிழந்த கனிஷ்கா வீட்டின் பின்புறம் மைதானமாக உள்ளது. அந்த இடத்தில் கழிவுநீர் தேங்கி குப்பை குவியலாக காட்சியளிக்கிறது. இந்த பகுதியில் உள்ள பல குழந்தைகளுக்கு மர்ம காய்ச்சல் வந்து ஆங்காங்கே உள்ள மருத்துவமனையில்  தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்த கனிஷ்காவின் அண்ணன் சபரி சரணுக்கும் தற்போது காய்ச்சல் அதிகமாகி மாதவரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். ஆனாலும், அதிகாரிகள் இந்த பகுதியில்  சுகாதார பணிகளை மேற்கொள்ளவில்லை,” என்றனர்.

Tags :
× RELATED வெளிமாநில தொழிலாளர்களுக்கு...