காவல் நிலையத்தில் இருந்து கஞ்சா வியாபாரி எஸ்கேப்

திருவொற்றியூர்: செங்குன்றம் பேருந்து நிலையம் அருகே கடந்த 9ம் தேதி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கிடமாக அங்கு நின்றிருந்த இரண்டு வாலிபர்களை பிடித்து சோதனை செய்தபோது அவர்கள் கையில் கஞ்சா பொட்டலம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் செங்குன்றம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது, செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (20), விஜி (20) என்பது தெரிந்தது. வியாசர்பாடியை சேர்ந்த பிரபல ரவுடி இட்டா (எ) அஜித்குமார் (26) தற்போது குற்ற வழக்கில் புழல் சிறையில் உள்ளார். இவரது மனைவி ரம்யா (23). மாதவரம் பகுதியில் கஞ்சாவை பதுக்கி வைத்து, விஜி மற்றும் விக்னேஷ் ஆகியோர் மூலம் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ரம்யா, விக்னேஷ், விஜி ஆகிய மூவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். ரம்யா இளம் பெண்ணாக இருப்பதால் அன்று இரவு மாதவரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மகளிர் காப்பகத்தில் போலீசார் ஒப்படைத்தனர்.

பின்னர் மறுநாள் மாதவரம் காவல் நிலையம் அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென ரம்யா காவல் நிலையத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.  இதையடுத்து காவல் நிலையத்தில் இருந்து தப்பி ஓடிய பிரபல கஞ்சா பெண் வியாபாரியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் போலீசார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>