வரும் உள்ளாட்சி தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடிவு: புதிய நீதிக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: வரும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட புதிய நீதிக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.  தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல் குறித்து புதிய நீதிக்கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, கட்சியின் நிறுவனர் ஏ.சி.சண்முகம் தலைமை வகித்தார். செயல் தலைவர் ஏ.ரவிக்குமார், இணை பொதுச் செயலாளர் ஆர்.டி.சேதுராமன், நிர்வாகிகள் ராஜாராம், பழனி, சுதர்சன், பிரகாஷ், செல்வம், ரவி, யுவராஜ், நடராஜன், லோகநாதன், கவுரி மனோகர் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தமிழகத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தல்களில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த புதிய நீதிக்கட்சி, நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலிலும் இதே கூட்டணியில் இணைந்து செயல்படும். மேலும் வெற்றி வாய்ப்புள்ள இடங்களை அதிமுக கூட்டணியில் கேட்டுப் பெற்று அதிமுக சின்னமான இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

 தமிழக விவசாயிகள் நலன் கருதி குடிநீர் பஞ்சத்தை நிரந்தரமாக போக்கவும், மழைநீர் வீணாகாமல் சேகரித்து வைக்கும் வகையில், வரும் நிதியாண்டில் தமிழகம் முழுவதும் கூடுதலாக தடுப்பணைகள் மற்றும் புதிய அணைகளை கட்ட தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு மத்திய அரசு நிதியுதவி செய்ய வேண்டும். கல்லூரி படிப்பிற்காக வங்கியில் கடன் பெற்று பயிலும் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மாணவர்கள் வங்கியில் வாங்கிய கல்வி கடன் தொகை முழுவதையும் வட்டியோடு மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். சென்னை மாநகரத்தில் பெருகி வரும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை குறைக்கும் வகையில் முக்கிய பகுதிகளில் தமிழக அரசு மேம்பாலங்களை கட்ட நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Related Stories: