×

காவல் துறையினருக்கே பாதுகாப்பு இல்லை போலீஸ்காரரை தாக்கி செல்போன் பறிப்பு: மாணவர்கள் உள்பட 3 பேர் சிக்கினர்

சென்னை: பூந்தமல்லி அருகே போலீஸ்காரரிடம் செல்போன் பறித்த மாணவர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.ஆவடியை சேர்ந்தவர் சிலம்பரசன் (31). இவர், திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு பணி முடித்து விட்டு பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம் வழியாக ஆவடி நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார். சென்னீர்குப்பம் பைபாஸ் சாலை அருகே சென்ற போது செல்போனில் அழைப்பு வரவே, பைக்கை ஓரமாக நிறுத்தி விட்டு போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் மறைந்திருந்த 3 பேர் திடீரென சிலம்பரசனை தாக்கி விட்டு அவரது செல்போனை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பியோடி விட்டனர்.

இதையடுத்து சிலம்பரசன் பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக அந்தப் பகுதியில் ரோந்து வாகனத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் செல்போன் பறித்துச் சென்றவர்களை வலைவீசி தேடியபோது, அவர்கள் அந்தப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு லாரியின் பின்பக்கம் பதுங்கி இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். பின்னர் 3 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையில் மூவரும் ஆவடி அடுத்த அயப்பாக்கத்தைச் சேர்ந்த 17 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிய வந்தது. இதில் ஒருவன் 10ம் வகுப்பும், மற்றொருவன் பாலிடெக்னிக் படிப்பதும் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார், இவர்கள் இதேபோல வேறு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார்களா என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.


Tags : policeman ,
× RELATED டெல்லி விவசாயிகள் போராட்டத்தின் போது...