×

எரிச்சநத்தம் வங்கியில் போலி கையெழுத்து போட்டு அடகு வைத்த 34.5 பவுன் நகை மோசடி

விருதுநகர், நவ. 12: விருதுநகர் அருகே எரிச்சநத்தம் வடக்கு தெருவை சேர்ந்த சந்திரா (60), விருதுநகர் எஸ்பி பெருமாளிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
எரிச்சநத்தம் கிராமத்தில் உள்ள வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளேன். கடந்த 3.9.18 அன்று 16 பவுன் நகையை அடகு வைத்து ரூ.2.45 லட்சம் கடனாக பெற்றேன். அன்றைய தினத்தில் மேலும் 18 1/2 பவுன் நகைளையும் வைத்து ரூ.1.30 லட்சம் கடன் பெற்றேன். அதை தொடர்ந்து உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு, திருப்பரங்குன்றத்தில் உள்ள இளைய மகன் வீட்டில் தங்கி இருந்தேன்.

இந்நிலையில் நகைகளை திருப்புவதற்காக 14.10.19 அன்று வங்கிக்கு சென்று மேலாளரிடம் இரு அடமான கடன் அட்டைகளை கொடுத்தேன். இரண்டு அட்டைகளையும் வைத்து கொண்டு வேலை அதிகம் இருப்பதால் நாளை வந்து நகைகளை வாங்கி செல்லலாம் என கூறி அனுப்பிவைத்தார். அதை தொடர்ந்து 3 நாட்கள் கழித்து 18.10.19 அன்று பணத்தை செலுத்தி நகைகை பெறுவதற்காக வங்கி சென்று நகைகளை கேட்டேன். அதற்கு மேலாளர் கடந்த 12.4.19 அன்று ரூ.1,39,050 மற்றும் 31.8.19 அன்று ரூ.2,62,130 செலுத்தி நகைகளை திருப்பி விட்டதாக தெரிவித்தார். மேலாளரிடம் இன்றுதான் பணம் கட்டி நகை திருப்ப வந்திருக்கிறேன். இப்படி இருக்கும் போது நகைகளை திருப்பி விட்டதாக கூறுகிறீர்கள் என கேட்டேன்.

அதெல்லாம் எனக்கு தெரியாது, உங்க கையெழுத்து போட்டு திருப்பியதாக தான் வங்கியில் பதிவாகி இருப்பதாக மிரட்டினார். என்ன செய்வது என தெரியாமல் திரும்பி வந்து விட்டேன். வங்கியில் நகை திருப்ப போட்டப்பட்டுள்ள கையெழுத்து என்னுடையது அல்ல. வங்கியில் எனது கையெழுத்தை போட்டு நகைகளை மோசடி செய்யும் நோக்கில் வங்கி மேலாளர் மோசடி செய்துள்ளார்.  வங்கியின் எரிச்சநத்தம் கிளை மேலாளர் மீது உரிய நடவடிக்கை எடுத்து நகைகளை மீட்டுத்தர வேண்டும்‘ என தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED கருத்து கேட்பு கூட்டம் நடத்தாமலேயே...