×

திருவில்லிபுத்தூரில் வீட்டு வரி உயர்வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

திருவில்லிபுத்தூர், நவ. 12: திருவில்லிபுத்தூரில் நகராட்சி நிர்வாகம் உயர்த்திய வீட்டு வரி உயர்வை ரத்து செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவில்லிபுத்தூரில் நகராட்சி அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சி மாவட்ட குழு உறுப்பினர் திருமலை தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மகாலட்சுமி, நகர செயலாளர் ஜெயக்குமார், ஒன்றியச் செயலாளர் சசிகுமார் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில், ‘திருவில்லிபுத்தூர் நகராட்சி குளறுபடிகளுடன் பல மடங்கு உயர்த்திய வீட்டு வரி மற்றும் குப்பை வரியை ரத்து செய்ய வேண்டும். கழிவுநீர் மற்றும் மழைநீர் செல்ல தடையாக இருக்கும் வாறுகால் அடைப்புகளை சீரமைக்க வேண்டும். நகரில் உள்ள 33 வார்டுகளுக்கும் சீரான குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். மழைக்காலமாக இருப்பதால் நீர்வரத்து கால்வாய்களை தூர்வார வேண்டும். பெண்கள் கழிப்பறைகளை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். டெங்கு மற்றும் மலேரியா காய்ச்சல் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். கட்சி மாவட்ட குழு செயலாளர் அர்ஜூணன் ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து பேசினார்.
நகர் குழு உறுப்பினர்கள் வீரசதானந்தம், பிச்சைக்கனி, ரேணுகாதேவி, மரிய டேவிட் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : Demonstration ,home tax hike ,Srivilliputhur ,
× RELATED விருதுநகர் மாவட்டம்...