×

சிவகாசியில் பணம் இல்லாத ஏடிஎம் மையங்கள்

சிவகாசி, நவ, 12: சிவகாசி, திருதங்கல் பகுதிகளில் சில குறிப்பிட்ட வங்கி ஏடிஎம் மையங்களில் எப்போதும் பணம் இருப்பதில்லை என வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
வங்கி வாடிக்கையாளர்கள் எப்போதும் பணம் எடுக்கும் வகையில் ஏடிஎம் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், சிவகாசியில் உள்ள ஒரு சில வங்கிகளின் ஏடிஎம் மையங்களில் எப்போது சென்றாலும் பணம் எடுக்க முடியவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. ஏடிஎம் மையங்கள், போதுமான பணம் இல்லாமல் காட்சி பொருளாக உள்ளன. குறிப்பாக சாட்சியாபுரத்தில் உள்ள இரண்டு தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் மையங்கள், திருத்தங்கல்லில் உள்ள தனியார் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏடிஎம் மையங்களில் பணம் இருப்பதில்லை. இதனால், சிறுவணிகர்கள் வியாபாரத்திற்காக பணத்தை எடுக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். அவசர தேவைக்கு பணத்தை எடுக்க சிவகாசியில் உள்ள ஏடிஎம் மையங்களுக்கு அலைய வேண்டியுள்ளது என புகார் கூறுகின்றனர். வங்கி மூலம் பணப்பரிவர்த்தனை செய்ய வலியுறுத்தும் வங்கி நிர்வாகங்கள் அதற்கான வசதிகளை வாடிக்கையாளர்களுக்கு செய்து கொடுப்பதில்லை.

சிவகாசியில் ஏடிஎம்எம் மையங்களில் பணம் இல்லாததால் அலுவலங்களுக்கு செல்பவர்கள், மருத்துவமனைக்கு செல்பவர்கள், கட்டட வேலைக்கு செல்பவர்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் பெரும் அவதிப்படுகின்றனர். குறிப்பாக விடுமுறை தினங்களில் வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்தி அடைகின்றனர். எனவே, ஏடிஎம் மையங்களில் எப்போதும் பணம் இருக்கும் வகையில் வங்கி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வங்கி வாடிக்கையாளர் ஈஸ்வரி கூறுகையில், ‘திருத்தங்கல் பகுதியில் 5 ஆயிரம் பணம் எடுக்க இரண்டு ஏடிஎம் மையங்களுக்கு ஏறி இறங்கினேன். எதிலும் பணம் இல்லை. பின் நீண்ட தூரம் சென்று, வேறொரு ஏடிஎம்மில் பணம் எடுத்தேன். ஏடிஎம் மையங்களை காட்சிக்காக வைக்காமல், வாடிக்கையாளர்கள் பயன்படும் வகையில் வைக்க, வங்கி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள், குறைந்தபட்ச இருப்பு தொகையை வைக்க வேண்டும். இல்லையென்றால் வங்கிகள் நம்மிடம் அபராதம் வசூல் செய்கின்றன. இதேபோல, வங்கி ஏடிஎம்களில் பணம் இல்லை என்றால் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறையை கொண்டு வர வேண்டும்’ என்று கூறினார்.

Tags : Sivakasi ,
× RELATED சிவகாசியில் அச்சக உரிமையாளர் வீட்டில் 35 சவரன் நகை கொள்ளை