×

ரோசல்பட்டி ஊராட்சியில் கிடப்பில் போடப்பட்ட சாலைப் பணி

விருதுநகர், நவ. 12: ரோசல்பட்டி ஊராட்சியில் உள்ள என்.டி.முருகன் நகரில் சாலை, வாறுகால் அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். விருதுநகர் ரோசல்பட்டி ஊராட்சி என்.டி.முருகன் நகர் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: ரோசல்பட்டி ஊராட்சி என்.டி.முருகன் நகரில், பாண்டியன் நகர் காவல்நிலையத்தை ஒட்டிய தெருவில், கடந்த 16 ஆண்டுகளாக வசித்து வருகிறோம்.  ஊராட்சி ஒன்றிய ஒப்பந்ததாரரால், 10 நாட்களுக்கு முன்பாக சாலை மற்றும் வாறுகால் அமைக்க ஜேசிபி மூலம் வீட்டின் முன்பகுதி படிகற்கள் மற்றும் கழிவுநீர் அமைப்புகளை அகற்றினார்.

தெருவில் மண் அள்ளப்பட்டு தற்போது குண்டும், குழியாக காட்சி தருகிறது. புதிய சாலை அமைப்பதற்காக தோண்டியதால் ஏற்பட்ட சிரமங்களை பொதுமக்கள் பொறுத்துக் கொண்டனர். அப்பகுதியில் சிலர் ஏற்படுத்திய முட்டுக்கட்டையால் தற்போது ரோடு மற்றும் வாறுகால் அமைக்கும் பணி தொடங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தெருவில் வசிக்கும் ஊனமுற்றோர், முதியோர் சாலையில் நடக்கவும், வீடுகளுக்குள் நுழைய முடியாமல் அவதிப்படுகின்றனர். வாறுகால்களை சேதமாக்கியதால், கழிவுநீர் தெருவில் தேங்கும் நிலையும், சுகாதாரக்கோடு உருவாக்கும் நிலை உருவாகி உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தெருவிற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் சாலை மற்றும் வாறுகால் அமைக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

Tags : Rosalpatti ,
× RELATED கூலி தொழிலாளி வீட்டில் நகை, பணம் கொள்ளை