×

உத்தமபாளையம், க.புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி மலையடிவாரத்தில் மழை நீரை சேகரிக்க சிறு தடுப்பணைகள் கட்ட வேண்டும்

தேவாரம், நவ.12:அதிகளவில் மழை பெய்தும் உத்தமபாளையம் மலையடிவாரத்தை ஒட்டி உள்ள நிலங்களில் தடுப்பணைகள் இல்லாததால் தண்ணீர் வீணாகிறது. வேளாண்மை பொறியியல் துறை உரிய நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். உத்தமபாளையம், அனுமந்தன்பட்டி, க.புதுப்பட்டி மேற்குதொடர்ச்சி மலையடிவார பகுதியில் ஆண்டுதோறும் தென்மேற்கு, வடகிழக்கு, கோடை மழை பெய்யும். ஆனால் சென்ற வருடம்(2018), குறைவாகவே பெய்தது. 2019ம் வருடத்தில் எதிர்பாராதவிதமாக மழை பெய்கிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து இருந்தாலும், இது நிலையாக நிற்பதற்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. மழை பெய்தால் மட்டுமே இங்கு நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விவசாயத்திற்கு ஏற்ற வகையில் அமையும். தமிழக அரசின் மேற்குதொடர்ச்சி மலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்போது, வேளாண்மை பொறியியல் துறையால் தடுப்பணைகள் கட்டப்படுவதுண்டு.

ஆனால் கடந்த சில வருடமாகவே உத்தமபாளையம், அனுமந்தன்பட்டி, க.புதுப்பட்டி மலையடிவாரத்தை ஒட்டி உள்ள விவசாய நிலங்களை இத்துறையினர் கண்டும், காணாமல் உள்ளனர். மலையடிவாரத்தை ஒட்டி உள்ள நிலங்களில் இயற்கையான தண்ணீரை வீணாக்காமல் பாதுகாத்திட போதிய நடவடிக்கை இல்லாதநிலையில் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தடுப்பணை கட்டப்படும்போது இதிலிருந்து பெறப்படும் தண்ணீரால் தோட்ட கிணறுகளுக்கும் ஊற்றுகிடைக்கும். நிலத்தடி நீர்மட்டமும் சேகரமாகும். இதனால் கனமழை பெய்தால் பழைய தடுப்பணைகளிலும் மழை நீர் சேகரிக்க வசதிகள் ஏற்படும். எனவே வறட்சி காலங்களிலும் தண்ணீர் கிடைக்கவும், இயற்கை வளத்தை பாதுகாத்திடவும் தேவையான நடவடிக்கை எடுக்கவேண்டும். குறிப்பாக அனுமந்தன்பட்டி, க.புதுப்பட்டி, உத்தமபாளையம் உள்ளிட்ட ஊர்களை சுற்றிலும் சிறிய தடுப்பணைகள் அமைக்கப்பட வேண்டும். குறிப்பாக மலையடிவாரத்தை ஒட்டி உள்ள நிலங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டால்தான் மண்வளம் பாதுகாக்கப்படுவதுடன், இயற்கைவளமும் பாதுகாக்கப்படும்.
இதுகுறித்து விவசாயி சாகுல் கூறுகையில்,

நிலத்தடி நீர்மட்டத்தை பெருக்கிடவும், மழைநீரை சேகரம் செய்யவும் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் பட்டியலிட்டு சிறு தடுப்பணைகள், கல் தடுப்புகள் போன்றவை மூலம் மழை நீர் சேகரிக்கப்படும். ஆனால் தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம், தேனியில் செயல்படும் வேளாண்மை பொறியியல் துறை இதற்கான நடவடிக்கையில் இறங்காத நிலையில் ஒவ்வொரு வருடமும் மழை நீர் வீணாகிறது என்றனர்.

Tags : hills ,Mananthanpatti ,
× RELATED வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும்...