×

நிதி ஒதுக்கப்பட்ட பின்பும் சாரல் விழா நடத்துவதில் இழுபறி

தேனி, நவ. 12: தேனி மாவட்டத்தில் சுருளி அருவி பகுதியில் இந்த ஆண்டு சாரல்விழா நடத்த சுற்றுலாத்துறை நிதி ஒதுக்கிய நிலையில், விழா நடத்தப்படாமல் இழுபறியாக உள்ளது. தேனி மாவட்டத்தின் சிறந்த சுற்றுலா பகுதியாக சுருளி அருவி உள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலை பகுதியில் பெய்யும் மழையின் காரணமாக சுருளி அருவியில் ஆர்ப்பரித்து விழும் நீரில் குளிக்க பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சிறப்புவாய்ந்த சுருளி அருவியில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் சாரல் விழா நடத்தப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 23ம் தேதி சாரல் விழா நடத்தப்பட்டது. இவ்விழாவின்போது, அரசு நலத்திட்ட உதவிகள், கண்காட்சி அரங்குகள், பள்ளி, மாணவ, மாணவியர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசு வழங்குதல், பெரியவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுவது உண்டு. நடப்பு ஆண்டிற்கு சாரல் விழா நடத்த சுற்றுலாத் துறை உரிய நிதியை ஒதுக்கீடு செய்ததாக கூறப்படுகிறது. இருந்தபோதிலும் இதுவரை சாரல்விழா நடத்துவதற்கான எவ்வித அறிவிப்பையும் மாவட்ட நிர்வாகம்
அறிவிக்கவில்லை.

இதுகுறித்து விசாரித்தபோது, தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொள்ளும் வகையில் தேதி அமைய வேண்டும். கடந்த மாதம் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் தமிழக துணை முதல்வர் ஈடுபட்டதால் அப்போது விழா நடத்த முடியாமல் போய்விட்டது. இப்போது அவர் அமெரிக்காவிற்கு சென்றுள்ளதாலும் சாரல் விழா நடத்த தேதி முடிவு செய்வதில் இழுபறி நீடிப்பதாக பேச்சு நிலவுகிறது. தமிழக துணை முதல்வரின் தேதிக்காக சாரல் விழா ஒத்திவைக்கப்படும் நிலையால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.

Tags : ceremony ,tsar ,
× RELATED இந்து,முஸ்லிம்கள் இணைந்து நடத்திய பொன் ஏர் விடும் விழா