×

சிவகங்கை, காரைக்குடி நகராட்சியில் எரியாமல் நிற்கும் ஹைமாஸ் விளக்குகள்

சிவகங்கை/காரைக்குடி, நவ.12:  சிவகங்கை, காரைக்குடி நகர்ப்பகுதியில் ஹைமாஸ் விளக்குகள், தெரு விளக்குகள் மாதக்கணக்கில் எரியாததால் பொதுமக்கள் பாதிப்படைந்து வருகின்றனர். சிவகங்கை நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. இங்கு சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. நகரின் உட்பகுதி மற்றும் விரிவாக்கப்பகுதிகளில் புதிய வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. நகர் முழுவதும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தெருவிளக்குகள் உள்ளன. அரண்மனைவாசல், பஸ் ஸ்டாண்ட், சிவன்கோவில், கவுரி விநாயகர் கோவில், கோட்டை முனியாண்டி கோவில், ரயில்வே ஸ்டேசன், மதுரை முக்கு, கலெக்டர் அலுவலகம் உள்பட 11 இடங்களில் ஹைமாஸ் எனும் உயர் மின்கோபுர விளக்கு உள்ளது. ஒரு ஹைமாஸ் விளக்கு அமைக்க ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சம் வரை செலவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த விளக்குகளில் பஸ் ஸ்டாண்ட், அரண்மனைவாசல் உள்ளிட்ட சில விளக்குகள் தவிர மற்ற அனைத்து விளக்குகளும் அடிக்கடி பழுதடைந்த நிலையிலேயே உள்ளன. ஒரு முறை பழுதானால் மாதக்கணக்கில் சரி செய்யப்படாமல் உள்ளன. தொடர்ந்து பராமரிப்பு செய்யப்படாமல் உள்ளதால் நிரந்தரமாக பழுதடையும் விளக்குகளும் உள்ளன. இதுபோல் தெருவிளக்குகள் எரியவில்லை எனக்கூறினால் சோக் உள்ளிட்ட மின் சாதன பொருட்கள் இல்லை என கூறுகின்றனர். இதனால் நகர் முழுவதும் பல இடங்களில் தெரு விளக்குகள் எரிவதில்லை.

காந்தி வீதியில் இருந்து பிரியும் தெருக்கள், பஸ் ஸ்டாண்ட் பின்புறம் என நகரின் முக்கிய தெருக்களிலேயே தெரு விளக்குகள் அடிக்கடி எரியாத நிலை உள்ளது. நகராட்சி நிர்வாகம் சார்பில் ஹைமாஸ் விளக்குகள் மற்றும் தெரு விளக்குகளை உரிய பராமரிப்பு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் காரைக்குடி நகராட்சி மக்களின் வசதிக்காக 5500க்கும் மேற்பட்ட தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தவிர பழைய, புதிய பஸ் ஸ்டாண்டு, இரண்டாம் பீட், கொப்புடைய அம்மன் கோயில், ராஜீவ்காந்தி சிலை, பெரியார் சிலை ஆகிய பகுதிகளில் பல லட்சம் செலவில் ஹைமாஸ் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை நகராட்சி நிர்வாகம் சார்பில் முறையாக பராமரிப்பது கிடையாது. இதனால் பெரும்பாலான விளக்குகள் பழுதடைந்து எரிவதில்லை. முக்கிய பகுதிகள் இருளில் மூழ்கி உள்ளது. இது குறித்து பலமுறை நகராட்சி நிர்வாகத்தில் புகார் கொடுத்தும் பயன்இல்லாத நிலையே உள்ளது என சமூகஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளார்.

சமூகஆர்வலர்கள் கூறுகையில், காரைக்குடி நகராட்சி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தெருவிளக்குகள் பராமரிப்பு இல்லாமல் எரியாமல் உள்ளன. சோடியம் லைட்களுக்கு கீழே டியூப் லைட் கட்டி தொங்க விட்டு எரிய விட்டுள்ளனர். தெருவிளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் டூவீலர்களில் செல்வோர் தடுமாறி கீழே விழும் நிலை உள்ளது. அதேபோல் முக்கிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள ஹைமாஸ் லைட்டுகளுக்கும் இதே நிலை தான் உள்ளது. எனவே இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Sivaganga ,Himayas ,Karaikudi ,
× RELATED 6 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த...