×

விவசாயிகள் கடும் அதிருப்தி எஸ்எம்எஸ் ஆலோசனை திட்டம் முடக்கம்

காரைக்குடி, நவ.12:  விவசாயிகளுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் ஆலோசனை தெரிவிக்கும் திட்டம் முடங்கி உள்ளது. இதனால் சீசன் நேரத்தில் உரிய ஆலோசனை பெறமுடியாமல் விவசாயிகள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகளின் நேரத்தை மிச்சப்படும் வகையில் அவர்களின் செல்போன்களுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் ஆலோசனை வழங்கப்படும் திட்டம் கடந்த 2015ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்த எஸ்.எம்.எஸ் ஆலோசனை திட்டம் மத்திய அரசின் கிசான் விவசாயிகள் போர்ட்டலுடன் இணைந்து செயல்படுத்தப்பட்டது. மாவட்ட வானிலை குறிப்பு, அதிக, குறைபட்ச வெப்பநிலை, காற்றின் ஈரப்பதம், வேகம், மழையளவு ஆகிய விவரங்கள் தரப்படுகின்றன.
கால்நடை வளர்ப்போர்களுக்கு குடற்புழு நீக்குவதற்கான குறிப்புகள், கோழிகளில் வெள்ளைகழிச்சல் நோயை கட்டுப்படுத்துவது, அசோலா உற்பத்தி, பால் உற்பத்தியை அதிகரிக்க ஆலோசனை, நெல்விதைகளின் முளைப்புத் திறன், வீரியத்தை மேம்படுத்தம் குறிப்புகள் உள்பட 100க்கும் மேற்பட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

எம்.கிசான் மற்றும் தனியார் ஏஜென்சியுடன் சேர்ந்து இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்தியா முழுவதும் உள்ள அனைத்து வேளாண் அறிவியல் நிலையங்கள், வேளாண், கால்நடை பல்கலைக்கழகங்கள் உள்பட பல்வேறு நிறுவனங்கள் இதில் இணைக்கப்பட்டு இருந்தன. தினமும் 5 லட்சம் மெசேஜ் என்ற இலக்குடன் இத்திட்டம் துவங்கப்பட்டது.
ஆனால் தினமும் 5 கோடி மெசேஜ் வரை அனுப்பப்பட்டு ரூ.10 லட்சம் வரை செலவு ஏற்பட்டது. இதனால் படிப்படியாக குறைந்து தற்போது மத்திய அரசு இத்திட்டத்துக்கு மூடுவிழா கண்டுள்ளது. இதனால் விவசாயிகள் சீசன் நேரத்தில் உரிய ஆலோனை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரிகள் சிலர் கூறுகையில், விவசாயிகள் சீசன் நேரத்தில் தங்களுக்கு தேவையான ஆலோசனை பெற ஒவ்வொரு துறையாக செல்ல நேரிடும். இதனால் நேரம் விரயமாகும். இதனால் அவர்களின் வீடு தேடி செல்போன்கள் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. பருவகாலத்திற்கு ஏற்ற வேளாண் தொழில்நுட்ப ஆலோசனை வழங்கப்பட்டது. தென்னை, நெல், கால்நடை வளர்ப்போர், மிளகாய் உற்பத்தி என ஒவ்வொரு விவசாயிகளுக்கும் அவரவர்களுக்கு தேவையான ஆலோசனை வழங்கப்பட்டது. இத்திட்டத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தால் அனைத்து விவசாயிகளும் இதில் தங்களை இணைத்துக் கொண்டனர். ஆனால் செலவு அதிகமானதால் இத்திட்டம் முடக்கப்பட்டதாக கூறப்படுகிறது என்றனர்.

Tags :
× RELATED மது விற்றவர் கைது