×

கருவேல மரம் ஆக்கிரமித்துள்ள கால்வாயை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை

சாயல்குடி, நவ.12:  கடலாடி அருகே உள்ள கருங்குளம், சமத்துவபுரம், கடுகுசந்தை சத்திரம், பெரியகுளம், ஒப்பிலான், அலக்குடி, கிருஷ்ணபுரம், டி.மாரியூர் ஆகிய பகுதிகளில் நெல், கம்பு, சோளம், நிலக்கடலை, மிளகாய் உள்ளிட்ட பயிர்கள் விவசாயம் செய்யப்படுகிறது. ஆயிரக்கணக்கான பனைமரங்களும் உள்ளன. மானாவாரி எனப்படும் மழையை நம்பி மட்டுமே விவசாயம் செய்யப்படுகிறது.  விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மழை தண்ணீரை சேமிப்பதற்காக மலட்டாறு முக்குரோட்டில் உள்ள பெரியகுளம் செல்லும் வழியில் கால்வாயுடன் கூடிய மதகுவை, தொண்டு நிறுவனம் ஒன்று கட்டி கொடுத்தது. மழை காலங்களில் இதில் தேங்கும் தண்ணீரை கொண்டு விவசாயிகள் ஓரளவிற்கு விவசாயத்திற்கு பயன்படுத்தி வந்தனர்.

தற்போது மதகு கட்டப்பட்டு பல வருடங்கள் ஆகிவிட்டதால் மதகு சேதமடைந்து விட்டது. கால்வாயினை தூர்வாராததால் மண் குவியல் மேவி மதகு அளவு குறைந்து தாழ்வாகி விட்டது. இதனால் தற்போது பெருக்கெடுத்து ஓடி வரும் மழை தண்ணீர் தேங்காமல், வீணாக கடலில் போய் கலக்கிறது. மேலும் கால்வாயில் சீமைகருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளதால் வரத்து கால்வாய் தூர்ந்து போய் கிடக்கிறது. எனவே கருவேல மரங்களை அகற்றி, கால்வாயினை தூர்வாரி, மதகுவை சீரமைக்க வேண்டும். தற்காலிகமாக மணல் மூட்டைகளை அடுக்கி தற்காலி தடுப்புகளை அமைத்து வீணாக ஓடி வரும் தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை