×

போக்குவரத்துக்கு இடையூறாக ரயில்வே சுரங்க பாதையில் தேங்கி நிற்கும் மழைநீர்

பரமக்குடி, நவ.12:  பரமக்குடி ரயில்வே சுரங்க பாதையில் மழைநீர் தேங்கியதால். வாகன ஓட்டிகள் ெசல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். மழைநீரை வெளியேற்ற அலட்சியம் காட்டும் நகராட்சி நிர்வாகத்திற்கு எதிராக போராட்டத்திற்கு பொன்னையாபுரம் மக்கள் தயாராகி வருகின்றனர். பரமக்குடி-முதுகுளத்தூர் சாலையில் ரயில் பாதை செல்வதால் ரயில் வரும் நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதை தடுக்கும் வகையில் பரமக்குடி-முதுகுளத்தூர் சாலையில் ரயில்வே பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் காவல் நிலையத்தில் தொடங்கி ரீச் கால்வாய் பகுதியில் முடிகிறது. இதனால் பொன்னையாபுரம், பாலன் நகர், அண்ணா நகர், எம்ஜிஆர் நகர் பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள், பள்ளி மாணவ,மாணவிகள் ரயில் பாதையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் வந்து சென்றனர். பொதுப்பணி துறை அதிகாரிகளால் இருசக்கர வாகனம் மற்றும் பாதசாரிகள் சென்று வருவதற்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நகராட்சி அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து பெய்து வரும் மழையால் அடிக்கடி மழைநீர் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. நகராட்சி நிர்வாகம் தண்ணீரை வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவதால் கடந்த மூன்று நாட்களாக பொதுமக்கள் சுரங்க பாதையை பயன்படுத்த முடியாமல் இரண்டு கி.மீ. தூரம் பாலத்தில் சென்று வருகின்றனர்.

இதனால் முதியவர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இருசக்கர வாகனத்தில் வருபர்கள் சுரங்கபாதையில் வருவதால் தண்ணீரில் சிக்கி கொண்டு இறங்கி வாகனங்களை தள்ளிக்கொண்டு வருகின்றனர். மேலும் மழைநீர் தேங்கியுள்ள நிலையில் மேல் பகுதியில் செல்லும் கழிவுநீர் கால்வாயில் இருந்து கழிவுநீர் கசிவதால் கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசுகிறது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகம், எம்.எல்.ஏ, சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு புகார் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கலெக்டர் தண்ணீர் தேங்காமல் இருப்பதற்கு நிரந்தரமான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மக்கள் போராட்டம் செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் செல்வம் கூறுகையில், ‘‘பாலம் கட்டி முடிந்தும் சுரங்க பாதை அமைக்காததால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டோம். சுரங்கபாதை அமைக்க பல கட்ட போராட்டங்களை செய்து சுரங்கபாதை அமைத்தனர். அதன் பிறகு திறப்பதற்கு போராட்டம், அப்போது, தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றுவதற்கு போராட்டம் என பொன்னையாபுரம், பாலன் நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்களை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். கலெக்டர், நகராட்சி நிர்வாகம் உடன் சுரங்க பாதையில் தேங்கும் தண்ணீரை அகற்றுவதற்கு நிரந்தரமான நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையெனில், மக்களை திரட்டி மதுரை-ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டம் செய்யவும், உள்ளாட்சி தேர்தல் புறக்கணிப்பு செய்யவும் தயங்க மாட்டோம்’’ என்றார்.

Tags : railway tunnel ,
× RELATED கத்தி முனையில் மிரட்டி வடமாநில...