சேடப்பட்டி அருகே பஸ் வசதி இல்லாமல் தவிக்கும் கிராமம்

பேரையூர், நவ. 12: சேடப்பட்டி அருகே பஸ் வசதி இல்லாததால் பள்ளி, கல்லூரி செல்ல முடியாமல் மாணவ, மாணவியர் தவித்து வருகின்றனர். அதிமுக எம்எல்ஏ, அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் மறியல் போராட்டம் நடத்த மக்கள் முடிவு செய்துள்ளனர். மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகா சேடபட்டி ஒன்றியம் குப்பல்நத்தம் ஊராட்சிக்கு உட்பட்டது கே.ஆண்டிபட்டி. இந்த கிராமத்திற்கு பஸ் வசதி கிடையாது, இது சம்பந்தமாக பலமுறை இந்த கிராமமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் கொடுத்துள்ளனர். இந்த கிராமத்திலிருந்து பஸ் ஏற வெளியூருக்கு செல்ல சேடபட்டிக்குத்தான் மக்கள் நடந்து வரவேண்டிய நிலை உள்ளது. மேலும் இங்கிருந்து செல்ல மினிபஸ்சோ மற்றும் ஷேர் ஆட்டோக்களே கிடையாது. இதனால் வெளியூர் செல்லக்கூடிய பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், உசிலம்பட்டி, திருமங்கலம், பேரையூர், சேடபட்டி, செல்வதற்கு 2கி.மீ நடந்தே வந்துதான் சேடபட்டி பஸ் நிறுத்தத்தில்தான் பஸ் ஏற முடியும். இதனால் குறித்த நேரத்திற்கு மாணவ, மாணவிகள் பள்ளி, கல்லூரி செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்த கிராமத்திற்கு பஸ் வந்து செல்ல உசிலம்பட்டி- பேரையூர் செல்லும் அரசு பஸ்கள் சேடபட்டி கே.ஆண்டிபட்டி, பரமன்பட்டி, சின்னக்கட்டளை வழியாக செல்ல வழித்தடம் உள்ளது. இதேபோல் திருமங்கலம் - சேடபட்டி செல்லக்கூடிய அரசு பஸ்கள் குப்பல்நத்தம் வழியாக கே.ஆண்டிபட்டி வந்து சேடபட்டி செல்ல வழித்தடம் உள்ளது. சாலை வசதி இருந்து பஸ் போக்குவரத்து இல்லாததால் இந்த கிராமத்து பொதுமக்கள் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இது சம்மந்தமாக உசிலம்பட்டி எம்எல்ஏ நீதிபதிக்கும், மதுரை தலைமை அரசு போக்குவரத்து பணிமனை அதிகாரிக்கும், உசிலம்பட்டி மற்றும் திருமங்கலம் போக்குவரத்து பணிமனை மேலாளருக்கும் பலமுறை மனு கொடுத்துள்ளோம். ஆனால் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை, இதனால் எங்கள் பள்ளிக்கு செல்லக்கூடிய மாணவ, மாணவிகளின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. நாங்கள் கொடுத்த புகார்களுக்கு அதிகாரிகள் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காததால் இன்னும் சில தினங்களில் சாலை மறியலில் ஈடுபட போவதாகவும், பஸ் வசதி கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என கிராமமக்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>