அதிமுக எம்எல்ஏவை எதிர்த்து மூதாட்டி திடீர் போராட்டம்

மதுரை, நவ. 12: பசுமை வீடு திட்டத்தில் தனக்கு வீடு கட்டிக்கொடுக்க அதிமுக எம்எல்ஏ மற்றும் உறவினர்கள் எதிர்ப்பதாக கூறி அவர்களுக்கு எதிராக கலெக்டர் அலுவலகத்தில் மூதாட்டி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி திருவள்ளுவர் தெருவை சேர்ந்த அங்காளன் மனைவி பழனியம்மாள்(70). இவர் இடிந்த வீட்டில் பல ஆண்டுகளாக குடியிருந்து வருகிறார். பசுமை வீடு திட்டத்தில் வீட்டை கட்டிக்கொடுக்க கோரி, உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த ஆண்டு மனு செய்துள்ளார்.

இந்நிலையில், பசுமை வீடு கட்ட அவருக்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல் அதிகாரிகள் இழுத்தடிப்பு செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஓன்றிய அலுவலகத்தில் முறையிட்டும் நடவடிக்கை இல்லை. அத்தொகுதியின் அதிமுக எம்எல்ஏவின் தம்பி மற்றும் அதிமுகவினர் இவருக்கு வீடு கட்டிக்கொடுக்க கூடாது என அதிகாரிகளிடம் கூறியதாகவும், அவர்கள் நிதி ஒதுக்கீடு செய்ய மறுப்பதாகவும் கூறி, பழனியம்மாள் நேற்று மதியம் கலெக்டரிடம் புகார் மனு கொடுக்க கலெக்டர் அலுவலகம் வந்தார். கலெக்டர் இல்லாததால், அறை முன்பு அதிகாரிகள், எம்எல்ஏ ஆட்கள் தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி அழுதவாறு, ஆவேசமாக கத்தினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்த அதிகாரிகள் அவரை சமதானப்படுத்தினர். போலீசார் அவரை சமாதானப்படுத்தி கீழே அழைத்து வந்தனர்.

இதுகுறித்து பழனியம்மாள் கூறும்போது, ‘‘என்னிடம் உள்ள வீட்டு மனையை அதிமுக எம்எல்ஏ மற்றும் அவரது தம்பி உறவினர்கள் பறிக்க முயற்சி செய்கின்றனர். ஏற்கனவே ஒரு பகுதியை அவர்கள் ஆக்கிரமிப்பு செய்துவிட்டனர். மீதியுள்ள இடிந்த வீட்டில் குடியிருக்கிறேன். அது மழைபெய்தால் கூட உள்ளே இருக்க முடியாது. அந்த அளவுக்கு வீடு இடிந்துள்ளது. பள்ளியிலும், திண்ணையிலும் தங்கியுள்ளேன். இதனால், வீடு கட்டி கொடுக்க கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு கொடுத்தேன். இதற்காக ரூ.ஒரு லட்சம் வரை லஞ்சம் வாங்கிக்கொண்டனர். எனக்கு வீடு கட்டிக்கொடுக்க கூடாது என எம்எல்ஏ நீதிபதி மற்றும் மகேந்திரன், சரவணன் ஆகியோர் தடுத்து வருகின்றனர். இடிந்த வீட்டையும் அபகரிக்க முயற்சி செய்கிறார்கள். அதிகாரிகள் அவர்களுக்கு உடந்தையாக உள்ளனர். இதனால், கலெக்டரிடம் முறையிட்டு மனு கொடுக்க வந்தேன். கலெக்டரும் இல்லை. வயதான நான் எங்கே போவேன்?’ என்றார்.

Related Stories:

>