உலக ரோல்பால் போட்டி இந்திய அணி வீரர்களுக்கு பயிற்சி நிறைவு

திண்டுக்கல், நவ. 12: சென்னையில் நடக்கவுள்ள உலக ரோல்பால் போட்டியில் இந்திய அணி சார்பில் விளையாடவுள்ள 24  வீரர், வீராங்கனைகளுக்கு பயிற்சி நிறைவடைந்தது.

அகில இந்திய ரோல்பால் போட்டிகள் சென்னை பெரம்பூர் ஐசிஎப்பில் உள்ள பழனிச்சாமி உள்விளையாட்டரங்கில் நவ.15ம் தேதி முதல் நவ.20ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் கனடா, நியூசிலாந்து, ஜெர்மன், ஜப்பான், உருகுவே, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, நேபாளம், எகிப்து, சவுதி அரேபியா, பிரான்ஸ், பங்களாதேஷ், நெதர்லேண்ட், கென்யா உட்பட 27 நாடுகள் கலந்து கொள்கின்றன. இந்திய அணி சார்பாக கலந்து கொள்ளும் விளையாட்டு வீரர்களுக்கான தேர்வு முகாம் குஜராத் மாநிலம், சூரத்தில் நடந்தது. இதில் ஆண்கள் அணி சார்பில் 12  பேரும், பெண்கள் அணி சார்பில் 12 பேரும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான பயிற்சி முகாம் சின்னாளபட்டி பிரிவில் உள்ள ராஜன் உள்விளையாட்டரங்கில் கடந்த அக்டோபர் 15ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெற்றது.

இவர்களுக்கு பாராட்டு மற்றும் வழியனுப்பு விழா சின்னாளபட்டி பிரிவில் நடந்தது. மாநில ரோல்பால் அசோசியேசன் மாநில செயலாளர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.

மாநில துணைச் செயலாளர் மாஸ்டர் பிரேம்நாத் வரவேற்று பேசினார். திண்டுக்கல் மாவட்ட பொருளாளர் அசோக்குமார் முன்னிலை வகித்தார். காந்திகிராமம் ஊராட்சிமன்ற முன்னாள் தலைவர் ராஜன், காந்திகிராமம் அறக்கட்டளை குடும்ப நல நிறுவனத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற அலுவலர் முருகேசன் மற்றும் ஊர்மக்கள் ஆகியோர் இந்திய அணியில் விளையாட தேர்வானவர்களுக்கு மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். முன்னதாக வீரர்களை விளையாட்டரங்கில் இருந்து சின்னாளபட்டி பிரிவுக்கு மேளதாளத்துடன் அழைத்து வந்தனர். இந்திய அணி சார்பாக ரோல்பால் போட்டிகளில் பங்கேற்கும் கண்மணி, சுஸ்மிதா ஆகியோர் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள், வைதீஸ்குமார் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>